பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152 ||-

அப்பாத்துரையம் - 12

வெளியே எழுந்த இச்சமூக வேறுபாடு அலைகளையும் சமூக உயர்வு தாழ்வுகளையும் தனக்குச் சாதகமாக்க அயலாட்சிக் குழுவினர் விரைந்ததில் வியப்பில்லை. அஃது அவர்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவமும் பல வகைத் தனிச் சலுகைகளும் தந்தது. ஆனால் பேரவை இயக்கத் தலைவர்கள் சில காலம் இப்பொறியில் விழாமல் விழிப்புடனிருந்தாலும், இறுதியில் எப்படியோ இம்மாய வலையிற் சிக்கினர். இது வருந்துவதற்கும், வியப்பிற்கும் உரியது என்பதில் ஐயமில்லை.

1908க்கும் 1916க்கும் இடைப்பட்ட காலப் பேரவைக்கு இச்சமூக அலைகள் சிக்கலான நிலைமை ஏற்படுத்தின. ஆயினும், பேரவைத் தலைவர்கள் இந்த இருதலைப் பொறியில் எப்பக்கமும் சாயாமல், நடுவுநிலை பேணி வந்தார்கள். சலுகைகளை எதிர்த்திருந்தால், முஸ்லிம் வகுப்புவாதம் வளர்ந்திருக்கும். அதை ஆதரித்தால், இந்து வகுப்புவாதம் வளர்ந்திருக்கும். ஆயினும், இந்த நடுவுநிலை நெடுநாள் நீடிக்க முடியாது. இத்தனையும் பேரவை உணர்ந்து கொண்டிருந்தது.

1909ல் லாகூரில் கூடிய 24-ஆம் பேரவையில் மீண்டும் தீவிரவாதிகள் கை மேலோங்கிற்று. தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த ஸர் பிரோஸ்ஷா மேத்தா, இக்காரணத்தால் கடைசி நேரத்தில் தலைமை வகிக்க மறுத்துவிட்டார். மிதவாதியாயினும், தொலைநோக்குடைய பழுத்த தேசியவாதியான பண்டித மதன் மோகன மாளவியா தலைவரானார். அவர் பழைய பேரவைத் தலைவரான ரமேஷ் சந்திரதத்தரைப் போலவும் திலகரைப் போலவும் சிறந்த வரலாற்றுப் பேரறிஞராயிருந்தார். அவர் தலைமையில் பேரவை மிண்டோ- மார்லி சீர்திருத்தங்களைக் கண்டித்தது. சிறப்பாக வகுப்புப் பிரதிநிதித்துவத்தை அது எதிர்த்தது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தலைமையில் வெற்றி நோக்கி நோக்கி நடத்தப்பட்டு வந்த அறப்போராட்டத்தையும் அது பாராட்டி, அதற்கு ஆதரவாக ரூபாய் 18,000 உதவி நிதி திரட்டி அனுப்பிற்று.

அடுத்த ஆண்டு அலகாபாதுப் பேரவையில் முஸ்லிம் பெருந்தலைவர் ஜனாப் ஜின்னாவே வகுப்புத் தீர்மானத்தைக் கண்டித்துப் பேசினார். மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் முஸ்லிம் வகுப்புவாதிகளை ஆதரித்த போதிலும், பேரவைப்