பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

மிதவாதிகளின் வெளியேற்றம்: தனிக் கட்சி அமைப்பு

159

இந்தியரின் நம்பிக்கையை இது பேரளவு புண்படுத்திற்று. தீவிரவாதிகளின் உரிமைக் குரலை இது அவமதித்தது. அவர்கள் பேரவையில் தீர்மானங்கள் செய்துவிட்டுக் கலையும் பழைய வழக்கத்தை விட்டுவிட்டு, நாட்டு மக்களிடையே நிலைமையை விளக்கி, அவர்கள் அரசியல் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பத் தொடங்கினார்கள். பேரவை இயக்கம் இது முதல் பொதுமக்கள் நலன் பேண வழிகாட்டும் பெருமக்கள் இயக்கமாய் இல்லை. அது பொதுமக்கள் இயக்கத்தின் மையக்கோப்பாக மாறத்தொடங்கிற்று. எனவே, மிதவாதிகள் மட்டுமன்றி, திருமதி அன்னி பெஸண்டும் மாண்டேகு- செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை ஏற்கும்படி அறிவுரை கூறியபோது,பொதுமக்கள் தீவிரவாதிகள் பக்கமாகக் கிளர்ந்தெழத் தொடங்கினார்கள். மிதவாதிகள், பேரவை தங்களது கையைவிட்டு நழுவிச் செல்வது கண்டு மனம் புழுங்கினார்கள்.

மிதவாதிகளுக்கு மேன்மேலும் ஆதரவு குறையத்தக்க முறையிலேயே அரசியலாரும் நடந்து கொண்டனர். அவர்கள் மிதவாதிகளின் அறிவுரைகளைக் கூட ஏற்காமல், பேரவையின் புதிய போக்கையும் மக்களியக்கத்தின் போக்கையும் 1857 புரட்சியை அடக்கியதுபோல அடக்க முற்பட்டார்கள்.இதற்காக இந்தியரே இல்லாத ஒரு குழுவை அமைத்து ஒரு கொடிய அடக்குமுறைச் சட்டம் வகுத்தனர். அதன் தலைவர் நீதிபதி ரௌலத்து என்பவர். ஆதலால், அது ‘ரௌலத்துச் சட்டம்’ என்று வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லாக் கட்சிகளும் அதைக் கண்டித்தும், அது நிறைவேற்றப்பட்டது. இதனால், அவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளும் கொடுமைகளும் தீவிரவாதிகளின் பக்கம் தேசத்தைத் திரள வைத்தன.

மிதவாதிகளில் ஒருவராகத் தோற்றக்கூடிய வகையில் அருளாளராயும் ஆன்மவாதியாயும் அமைந்த தலைவர் காந்தியடிகள்; தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் அவர் தீவிரவாதிகளும் கனவில் காணாத அறப்போர் முறைகளை வெற்றியுடன் கையாண்டவர். ஆயினும், இந்திய அரசியலில் அவர் இன்னும் திலகருடன் கைகோக்கத் தயங்கித்தானிருந்தார்.