9. காந்தி ஊழி
தலைவர்கள் போற்றும் தலைவர்
இந்தியாவின் அரசியல் வாழ்விலும் பேரவை வாழ்விலும் காந்தியடிகள் 1918லிருந்து 1948 வரை புகழ் ஒளி வீசியுள்ளார். அக்கால முழுவதையுமே நாம் 'காந்தி ஊழி' என்று கூறலாம். ஆயினும்,1935க்குப் பின் அவர் புகழ் ஒளி பண்டித ஜவஹர்லால் நேரு, தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வேறு பேரொளிகளைத் தோற்றுவித்து, அவற்றின் ஊடாகவே நின்று ஒளி வீசிற்று. எனவே, காந்தியடிகளே நேரடியாகப் பேரவையை நடத்திய காலத்தை மட்டுமே நாம் சிறப்பாகக் 'காந்தி ஊழி' என்று கூறுகிறோம். இது 1918லிருந்து 1935வரை நிலவிற்று.
பேரவையின் தலைவர்களுள்ளும் இந்தியாவின் பெரியார்களுள்ளும் காந்தியடிகளின் நிலை தனிச் சிறப்புடையது. இந்தியப் பொது மக்களிடையே அவரைவிடச் செல்வாக்குள்ள தலைவர்கள் முன்னும் இருந்ததில்லை; பின்னும் இருப்பது அரிது என்னலாம். அத்துடன் மக்களால் அவர் எந்த அளவு போற்றப் பட்டாரோ, அந்த அளவு மக்கள் போற்றும் தலைவர்களாலும் அவர் போற்றுதல் பெற்றிருந்தார்.ராஜாராம் மோகன்ராயருக்குப் பின் 'இந்தியாவின் தந்தையார்' என்ற தனிப்பெரும் பெயருக்கு உரியவர் அவர் ஒருவரே. ஆனால், ராம் மோகனருக்கு அப்பெயர் அறிஞரால் மட்டும் வழங்கப்பட்டது; காந்தியடிகளுக்கோ, பொதுமக்களாலும் பொதுமக்கள் தலைவராலுமே அப்பெயர் தனிச் சிறப்புடன் அளிக்கப்பட்டது.
பொதுவாக எந்தத் தலைவரையும்விடத் தேசிய அவையாகிய பேரவை பெரிது என்றே கூறவேண்டும். அதுபோல, பேரவையைவிடத் தேசமாகிய இந்தியா பெரிது என்றுதான் எவரும் கூறுவர். இது பொது அமைதி. ஆனால், இந்தியாவின் வரலாற்றில் காந்தியடிகளின் ஒளி புகுந்தபொழுது இந்நிலை