இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
165
கொண்டனர். தாழ்த்தப்பட்டவர் தொண்டில் அவர் இங்கேயே ஈடுபடத் தொடங்கியிருந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பினராகிய வள்ளியம்மை என்ற வீரத் தமிழ்ப்பெண்மணி அவர் தலைமையில் அறப்போரை வெற்றியுடன் நடத்தியவருள் ஒருவர். தாழ்த்தப்பட்ட வகுப்புப்பெண் ஒருத்தியையே அவர் தம் மூன்று புதல்வர்களுடன் தம் புதல்வியாக ஏற்று வளர்த்து வந்தார்.
காந்தியடிகள் இந்தியாவுக்கு வருமுன்பே அவர் தென்னாப்பிரிக்காப் பணியின் புகழ் இந்தியர் உள்ளங்களைச் சன்றடைந்திருந்தது. தொடக்கக் காலப் பேரவைகளில் அதனைப் பாராட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. அவர் புகழை இந்தியாவில் பரப்புவதிலும் அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்தபோது அவரை வரவேற்பதிலும், அந்நாளைய பேரவைத் தலைவர் திருமதி அன்னிபெஸண்டு அம்மையார் பெரும்பங்கு கொண்டிருந்தார்.
விடுதலை இயக்கத் தலைவர்களிடையே காந்தியடிகள் தனிப்பெருமைக்கு அவர் போர் முறையின் பண்பே காரணம். அவர் போர் முறையை 'அறப்போர் முறை' அல்லது ‘அன்புப் போர் முறை' என்று கூறலாம். பகைவரை எதிர்த்துப் போராடுபவர்கள் உள்ளத்திலே வெறுப்புடனோ சீற்றத்துடனோ போராடலாம். இவையே நாட்டுக்கு நாடு, அரசுக்கு அரசு உலகில் நடைபெற்று வரும் ஆயுதப் போர்களின் நிலைமை. ஆனால், ஆதிக்கத்தை எதிர்த்து உரிமைகளுக்காகப் போராடுபவர் முறை, எப்போதுமே வேறாகத்தான் இருந்து வந்துள்ளது. அது கட்டுப்பாடான எதிர்ப்பாகவும், உரிமைக் கோரிக்கையே நோக்கமாகவும், வரம்பாகவும் கொண்டு நடைபெறுகிறது. அரசியல் இயக்கங்களும், தொழிலாளர் போராட்டங்களும் இத்தகையவை. ஆனால், காந்தியடிகளின் போர் முறை இத்தனையிலிருந்தும் வேறுபட்டது.
காந்தியடிகள் அரசியலில் ஆன்மிக ஒழுக்கத்தை ஈடுபடுத்தியவர். அரசியல் போரை அவர் ஓர் ஆன்மிகப் போராக உயர்த்தினார்.எதிரியிடம் பகைமையும் சீற்றமுமின்றிப்பொறுமை யுடனும் அன்புடனும் எதிர்ப்பதாலும் ஒத்துழையாமை நடத்துவதாலும் அவர் அவன் உள்ளத்தில் மாற்றத்தை உண்டு பண்ண முயன்றார். 'அரசியல் வாழ்வின் அடிப்படை ஆதிக்கம்