(166) ||-
அப்பாத்துரையம் - 12
அன்று, அன்பிணக்கமே.' இந்த உண்மையைக் காந்தி அடிகளின் போர்முறை எடுத்துக் காட்டிற்று; தென்னாப்பிரிக்காவில் நிறவேறுபாட்டு அநீதியை எதிர்த்து உலகம் வியக்கும் பெருவெற்றி கண்டது. அப்போதுங்கூட அரசியலாதிக்கத்தை அதனால் எதிர்க்க முடியும் என்று எவரும் எண்ணவில்லை. இந்தியத் தேசியப் போராட்டத்தில் காந்தியடிகள் அதை ஈடுபடுத்திப் பெருவெற்றி கண்டார். இவ் வெற்றியை இன்று ஒருவரும் மறுக்க முடியாது. ஆனால்,அரசியலில் மட்டுமன்றி, உலகப் போர்களிற்கூட இதைப் பயன்படுத்தி அழிவு தவிர்க்க முடியும் என்பது அடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. பேரவைகூட இப்புத்தம்புதிய முறையை மேற்கொள்ளத் தயங்கிற்று. இதில் வியப்பில்லை. ஏனெனில், மனிதவுலகுக்கே இது புதிது! இந்தியப் பேரவை அரசியலில் இம்முறையைப் பின்பற்றியது போல, உலகப் பேரவையாகிய உலக நாடுகள் சங்கம் இதனைப் பின்பற்றக் கூடுமானால் உலகத்துக்கே ஒரு புதுப்பேரூழி ஏற்படும் என்னலாம்.
அறப்போர் முறை
அரசியல் தலைமை ஏற்குமுன்பே இந்தியாவில்
காந்தியடிகள் தம் அறப்போர் முறையைப் பல இடங்களில் கையாண்டார். தமிழகத்தில் வீரத் தலைவர் வ.உ.சிதம்பரனார் முதன் முதல் கையாண்ட வேலை நிறுத்த முடிகளிலும் குடியானவர் போராட்டங்களிலும் அதை ஈடுபடுத்தினார்.1914ல் கத்தியவார் சுங்கச்சாவடிப் போராட்டத்திலும்; 1917ல் சம்பரான் நீலித் தோட்டத் தொழிலாளர் சார்பிலும்; பம்பாயில் கூலித் தொழிலாளரைக் குடியேற்ற நாடுகளுக்கு அரசியலார் திரட்டி அனுப்ப முயன்றதைத் தடுக்க, அத்தொழிலாளர் மனைவியர் ஆற்றிய போராட்டத்திலும் அவர் ஈடுபட்டு பெருவெற்றி கண்டார். 1918-ஆம் ஆண்டில் அகமதாபாது நெசவாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தபோது, அவர் முதல் முதலாக உண்ணா நோன்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டார். அதே ஆண்டிலேயே, குஜராத்து வரி மறுப்பு இயக்கத்தில் குடியானவர் உரிமைகளை வலியுறுத்த இம்முறைகள் பேரளவில் பயன்பட்டன.