பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(170

அப்பாத்துரையம் - 12

நிகழ்ச்சியாகும். நிறத்திமிர் கொண்ட கொடுங்கோலனான டயர் என்பவன் தேசத்தின் மீதுள்ள தன் பகைமையையும் வஞ்சத்தையும் தீயும் புகையும் கக்கும் குண்டுகளாகப் பொழிந்து தீர்த்தான். அவன் செய்த அழிவுகளும் அடாச் செயல்களும் மனிதச் செயல் எல்லையைக் கடந்தவை. மனித மொழிகள் எவையும் அவற்றை வருணிக்கும் திறமுடையவை அல்ல. அச்செயலை இந்தியாவிலுள்ள அயல் மாகாணங்கள்கூட அறிய வொட்டாமல் ஆட்சியாளரின் பத்திரிகைத் தடையும் போக்குவரவுத் தடையும் வாரக் கணக்கில் தடுத்துவைத்திருந்தன; உலகமறியாதபடி மாதக்கணக்கில் தடுத்திருந்தன. மேலும் அவை என்றும் அதன் முழு உண்மையை இருட்டடிக்க முயன்றனவே யன்றி, உண்மையை வெளியிட்டுக் கூற விரும்பவில்லை. ஆனால், அப்படியிருந்தும், அவர்களின் அறிக்கையின்படியே, அன்று ஒரு நாள் மாலைக்குள் 1650 துப்பாக்கிக் குண்டுகள் பொழியப் பட்டிருந்தன.379க்கு மேற்பட்டவர் அடிமை இந்திய வாழ்வு நீத்து விடுதலை உலகம் நாடினர். 1200க்கு மேற்பட்டவர் கையிழந்தும், காலிழந்தும், கண்ணூறுபட்டும், நெஞ்சு பிளவுபட்டும் அழிவு பெற்றனர்.

போர்க்களத்தின் நிலை, களப்போர் வேளையின் கணக்கு இது. ஆனால், அடக்குமுறை வெறி இப்போர்க்கள எல்லை கடந்து, நகர மக்கள் எல்லார் மீதும் அவிழ்த்து விடப்பட்டிருந்தது. களப்போர் வேளையின் எல்லை கடந்து நாள் கணக்கில், வாரக் கணக்கில், நகரும் நகர்ப்புறங்களும், சுற்று வட்டாரங்களும் முற்றுகையிடப்பட்டிருந்தன. வெறிகொண்ட வெள்ளை வீரர்கள் ஆதரவற்ற மக்களை வேட்டையாடினார்கள். பெண்டிரும், குழந்தைகளும், தெருவில் ஊர்ந்து செல்லும்படியும், ஊளையிடும்படியும், தம் நாட்டைப் பழித்துப் பேசும்படியும் வற்புறுத்தப்பட்டு வதைக்கப்பட்டார்கள். மனித உணர்ச்சியற்ற முறையில் ஒரு நாடும் இனமும் அவமதிக்கப்பட்டன.

ஜாலியன்வாலாப் படுகளத்திற்கு உலகப் படைத்துறை வரலாற்றிலேயே ஒப்புமை காண்டல் அரிது. ஒரு நாட்டை ஆளும் அரசியல், அதுவும் நாகரிக உலகில் நாகரிக நாட்டின் பெயர் கூறும் அரசியல், அந்த அளவுக்குச் சீறி எழுவது என்பது ஒரு விளங்காப் புதிரேயாகும். 1798 புரட்சி நினைவும், 1857 புரட்சி