பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

179

தாகூரின் முயற்சியால் சாந்திநிகேதனமும் இக்காலத்தில் தொடங்கப்பட்டன. குஜராத்து வித்தியா பீடமும், சேரமாதேவி குருகுலமும் இதே வகையில் மேற்கிந்தியாவிலும், தென்னிந்தியா விலும் தொடங்கப்பட்டன. இவற்றுள் பல, இந்தியாவின் பண்டைக் குருகுலக் கல்வி முறையைப் பின்பற்றின.

அரசியல் பட்டங்களையும், சட்டமன்றப் பதவிகளையும், உயர் அரசியல் பணிகளையும் துறந்து, பலர் தியாக வாழ்வு ஏற்ற புனித ஆண்டு 1921. வழக்கறிஞர் பலர் தம் பட்டமும் தொழிலும் வீசி எறிந்து, தம் பிற்கால வாழ்நாள் முழுதும் வறுமையில் வாடி வதங்கினர். இவர்களுள் ஒரு சிலரே ஒத்துழையாமைக் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களிடையே தம் தியாகத் தழும்புகளைப் போக்கிக்கொள்ள முடிந்தது.

தலைவர்கள் சிறைப்பட்ட நாட்களிலும், அடக்குமுறை யாட்சி வரம்புமீறி ஆர்ப்பரித்த நாட்களிலும் மாணவர்கள் பள்ளியடைப்புக்கோரி ஆரவாரம் செய்தார்கள். கடைத் தெருக்கள் யாவும்

கடையடைப்பின் மூலம் தேசிய இயக்கத்துக்குத் தம் ஆதரவைத் தெரிவித்தன. தொழிலாளர்கள் முதலாளிகளை மீறித் தேசிய உணர்ச்சி அலைகளில் கலந்து கொண்டார்கள்.

ஒத்துழையாமைத் தத்துவங்களை எங்கும் கொண்டு பரப்பக் காந்தியடிகள், ஸி.ஆர். தாஸ், கவிஞர் சரோஜினி நாயுடு, பண்டித ஜவஹர்லால் நேரு முதலிய தலைவர்கள் இந்தியா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து, பதினாயிரக்கணக்கான மக்களின் கூட்டங்களில் பேசினர். அச்சமயங்களில் வெளிநாட்டுத் துணிகளும், ஆலைத்துணிகளும் தலைவர்கள் முன்னிலையில் மலைபோலக் குவித்து எரிக்கப்பட்டன. 'இனித் தூய தேசிய ஆடையான கதரே உடுத்துவோம்!' என்ற உறுதிமொழி எங்கும் ஆர்வத்துடன் கூறப்பட்டது.

காந்தியடிகள் ஒத்துழையாமைக் காலத்திலிருந்தே வற்புறுத்தி வந்த பொருளியற்கோட்பாடுகளில் முதன்மையானது கதர்க்கொள்கை. கைராட்டினத்தை அவர் தம் இயக்கத்தின் சின்னமாகக் கொண்டு பேரவைக்கு 1921ல் வகுத்த புதிய கொடியிலேயே அதைப் பொறித்தார். கதர் இயக்கத்தில்