180
அப்பாத்துரையம் - 12
தமிழகம் முன்நின்று காந்தியடிகளின் ஆக்கத் தொண்டுகளுக்கு முனைந்த ஆதரவு தந்துள்ளது.கர்நாடகமும் கூர்ஜரமும் அதனை அடுத்து இடம்பெற்றுள்ளன. காந்தியடிகள் கைராட்டை இயக்கத்தால் உழவரின் குடிசைத் தொழில் வளம் பெற வழி ஏற்பட்டது. அது பிரிட்டனின் ஆலைத் தொழிலுக்குப் பெருத்த அடிதந்ததுடன், இந்திய ஆலைத் தொழிலையும் வளர்த்துள்ளது. காந்தியடிகள் தொடக்கத்திலிருந்து ஆலைத்தொழிலை ஆதரிக்க மறுத்து வந்தாராயினும், பேரவை நாளடைவில் அதற்குத் தன் ஆதரவைத் தந்துள்ளது.
கதர் இயக்கத்துடன் மது விலக்குப் பிரசாரமும் காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்தின் ஆக்கத்துறை வேலையாயிருந்தது.
காந்தீயப் பேரவை
ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே ஸி.ஆர். தாஸ், லாலா லஜபதிராய், இராசேந்திர பிரசாது ஆகிய பல தலைவர்களுக்குத் தடை உத்தரவுகளும் சிறைத் தண்டனைகளும் விதிக்கப்பட்டன.பின்னாளில் எட்டாம் எட்வர்டு மன்னராகி முடிதுறந்த வேல்ஸ் இளவரசராகிய எட்வர்டு அவ்வாண்டு ஜூலைத் திங்களில் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவர் பம்பாய் வந்திறங்கிய போதும் பிற நகரங்களுக்கு வந்த போதும் அவருக்கு வரவேற்பளிக்கக் கூடாதென்றும், எங்கும் கறுப்புக்கொடி காட்டியும் கடைகளடைத்தும் அவருக்கு இந்தியர் அதிருப்தியைக் காட்ட வேண்டுமென்றும் காந்தியடிகள் கட்டளையிட்டார். இது எங்கும் வெற்றிகரமாக நடந்தேறியது. இளவரசரை எங்கும் அடைத்த கடைகளும், கறுப்புக் கொடிகளும், காவலர் கூட்டமுமே வரவேற்றன; மக்களை அவர் எங்கும் காணவில்லை. மக்கள் களிப்பு வாய்ந்த முகங்களை அவர் எங்கும் பார்க்க முடியவுமில்லை.
இதே ஆண்டில் சமூகக் கோளாறுகள் காரணமாக மலையாளத்தில் மாப்பிள்ளைகள் என்ற மலையாள முஸ்லீம்கள் கிளர்ச்சி செய்திருந்தார்கள். ஆட்சியாளர் அவர்கள்மீது மிகக் கொடிய அடக்குமுறைகளை ஏவினர்.படைத்துறைச்சட்ட ஆட்சி அம்மாவட்டத்தின் பெரும்பகுதியில் நடைபெற்று வந்தது.