இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
181
1921இல் அகமதாபாதில் நடைபெற்ற பேரவைக்குத் ‘தேசபந்து’ என்ற புகழ்ப் பெயருடன் விளங்கிய சித்தரஞ்சன தாஸர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், பேரவை கூடுவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன் அவர் அரசியலாரால் கைது செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக ஹகீம் அஜ்மல்கான் தலைமை தாங்கிப் பேரவையை நடந்தினார். இப்பேரவையை 'ஒத்துழையாமைப் பேரவை' அல்லது ‘காந்தீயப் பேரவை' என்று கூறலாம். இது முழுக்க முழுக்கக் காந்தீயப் பேரவையாகவே காட்சியளித்தது. நாற்காலிகளும் விசிப்பலகை களும் இல்லாமல், யாவரும் நிலத்தின் மீதே சப்பளமிட்டு உட்கார்ந்திருந்தனர். கூடாரமுழுதும் கதர்மயமாயிருந்தது. நாட்டின் கடுந்துறவுக்கு இவை தக்க சின்னங்களாய் அமைந்தன.
தீர்மானங்கள் வகையிலும் இப்பேரவை புதுமை வாய்ந்தது. இதிலே தீர்மானங்கள் இல்லை; தீர்மானம் மட்டுமே இருந்தது! அதாவது, ஒத்துழையாமைத் தீர்மானம் மட்டுமே இதில் இடம் பெற்றது. ஆனால், அவ்வொரு தீர்மானம் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப்பட்டத்துக்கான ஒரு சிறு நூல்போல அமைந்திருந்தது. அந்நாளைய ஆர்வ இளைஞர்களின் மேதை முழுமைக்கும் அது ஒரு சின்னம் என்னலாம். பேரவை இயக்கத் தொண்டர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி வாசகங்கள் தீர்மானத்தின் ஒரு பகுதியாயிருந்தன. மலையாள மாப்பிள்ளைக் கிளர்ச்சியை அடக்கிய வகைகளைத் தீர்மானத்தின் ஒரு பகுதி கண்டித்தது. தவிர இப்பேரவை மற்றொரு வகையிலும் சிறப்பாகக் காந்தியப் பேரவையாய் விளங்கிற்று. பேரவைப் பெருங்குழுவுக் குரிய எல்லா உரிமைகளையும் இது காந்தியடிகளிடமே தந்து, அவரைப் பேரவையின் முடிசூடா மன்னராகவும், பேரவை இயக்கத்தின் தனிப்பெருந்தளபதியாகவும் ஏற்றது. மக்கள் முன்பே தந்திருந்த அவர் தேசத் தலைமை இப்போது பேரவை எவருக்கும் து வரை தாராத தேசியத் தலைமையாயிற்று.
இப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் படாமற் போன ஒரு திருத்தத் தீர்மானம் பிற்காலப் பேரவையின் மாறுபாடு ஒன்றைச் சுட்டிக்காட்டுவதாயுள்ளது. 'தன்னரசு என்பது தங்குதடையற்ற முழு நிறை விடுதலையே' என்ற விளக்கம் சேர்க்கப்பட வேண்டுமென்பதே இத்திருத்தம். இதனைக்