இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
183
ஆனால், காந்தியடிகள் அவாவிய கடுந்தியாக முறைகளுக்கும் தற்கட்டுப்பாடுகளுக்கும் ஒத்துழையாமைக் கால ஆர்வம் கூட மக்களைப் பயிற்றுவித்து விடவில்லை. அரசியலாரின் அடக்குமுறைகள், 1921 இறுதிக்குள் மனித எல்லை மீறிவிட்டன. மக்களின் பொறுமையும் தியாக வெம்மையும் அது போலச் சில இடங்களில் மனித எல்லையை மீறின.
1922 பிப்ரவரி 5இல் சௌரி சௌரா என்னும் இடத்தில் காவல் துறையினர் உக்கிரத் தாக்குதலுக்கு ஆற்றாது மக்கள் எதிர் தாக்குதலில் முனைந்தனர். மக்களின் இவ்வெதிர்பாரா நடவடிக்கைகள் காவல் துறையினர் ஏற்பாடுகளைக் கவிழ்த்தன. மக்கள் சீற்றத்தின்முன் அவர்கள் படைக்கலங்கள் பயனற்றன. காவற் சாவடியையும் காவலரையும் அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். 'பழிக்குப் பழி' என்ற வெறியில் மக்கள் காந்தியடிகளின் போதனைகளைத் தற்காலிகமாக மறந்து விட்டார்கள்!
சௌரி சௌரா நிகழ்ச்சி அரசியலாருக்கு அதிர்ச்சி தந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அரசியலார் பெற்ற அதிர்ச்சியைவிடக் காந்தியடிகள் பெற்ற அதிர்ச்சி பெரிதாயிருந்தது. ஆன்மிக ஞானியராகிய அவர், மக்கள்மீது சீற்றம் கொள்ளவில்லை. பேரவை போராட்டத்தின் முழுப் பொறுப்பையும் தம்மிடமே விட்டிருப்பதால், அத் தவறு முழுவதும் தமதே எனக் கொண்டார். அதை அவர் மழுப்பவும் இல்லை. அதைத் தம் ‘இமாலயத்தவறு' என்று கூறிப் பேரளவில் தொடங்க இருந்த அரசியற்போராட்ட இயக்கத்தை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்; அதற்குக் கழுவாயாக உண்ணா நோன்பிருக்கவும் துணிந்தார். காந்தியடிகளை ஆன்மிக ஞானியார் என்று கருதியவர்கள்கூட அவர் கடுந்தூய்மை நிலை கண்டு மலைத்தார்கள். அவரை அரசியல்வாதி என்று கருதியவர்களோ, அவர் செயலின் தன்மையறியமாட்டாது கலங்கினார்கள். ஏனெனில், அரசியல் முறையில் இன்னலுக் காளான மக்களிடமிருந்து இத்தகைய தறுவாய்களில் ஆன்மிக ஒழுக்க முறையை எந்த அரசியல் தலைவரும் எதிர்பார்க்க முடியாது. அதை அரசியலார் பொறுப்பாக்குவரேயன்றி, மக்கள் சார்பான குற்றமாகக் கருதவும் மாட்டார்கள்.