பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

அப்பாத்துரையம் - 12

காந்தியடிகளின்

இவ்வான்மிகத் தூய்மை நிலை

வெள்ளையருள்ளும் நடுவு நிலையாளர் நெஞ்சை உருக்கியிருக்க வேண்டும் என்பது தேற்றம். ஒரு ரோமேன் ரோலந்து, ஒரு தால்ஸ்தாய், ஒரு ரஸ்கின் இதேயளவு பேரியக்கத்தை நடத்தியருக்கவும் முடியாது; மக்கள்மீதும் தம்மீதும் எல்லா இன்னல்களின் பொறுப்பையும் இப்படிஏற்றுக்கொண்டிருக்கவும் முடியாது ஆயினும், ஆட்சியிலுள்ள ஆதிக்கக் குழுவின் பிற்போக்கு மனப்பான்மையை இவ்வான்மிக நெறி அசைக்க வில்லை. அதன் உயர்வையும் அருமையையும் அவர்கள் உணர்ந்து கொள்ளவுமில்லை. அவர்களுடைய அடக்குமுறைத் தேர், முன்னிலும் கடுவேகத்துடன் மக்கள் வாழ்வை அரைத்துக் கொண்டே சென்றது. அது மட்டுமன்றி, சௌரி சௌராவுக்காக அரசியலாரைக் குறை கூறாமல், தாமே குற்றத்தை ஏற்ற அப்பெரியாரையே அது குறை கூறி, அவருக்குச் சிறைத் தண்டனையும் விதித்தது.

பல ஆண்டுகளுக்கு முன் திலகர் குற்றஞ்சாட்டப்பட்ட அதே இடத்தில், திலகருக்குத் தரப்பட்ட அதே ஆறாண்டுத் தண்டனை காந்தியடிகளுக்குந் தரப்பட்டது. ஆனால், வழக்கு மன்றங்களுள் எதிலும் இத்தகைய விசித்திர நிலையில் குற்றவாளியும் நீதிபதியும் இருந்ததில்லை. குழுமியிருந்த மக்கள், குற்றவாளியைத் தெய்வத்துக்கடுத்த தெய்விக வடிவம் என்றே கருதினார்கள். நீதிபதியும் அவர் முன் எழுந்து நின்று வணக்கம் செய்தார். நீதிபதி மனமார அவர் உயர்வைப் பாராட்டினார்; எண்ணற்ற இந்திய மக்களுள் தாமும் ஒருவராயிருந்து அவரைப் போற்றுவதாகத் தம்மைக் குறிப்பிட்டார். "உம்மைத் தண்டிப்பவன் நானல்ல; அதற்குத் தகுதியும் எனக்கில்லை. ஓர் இயேசுவைத் தண்டிக்கும் பிலாத்துவே நான். இறைவன் முன்னிலையில் என் தண்டனைகளுக்கு மன்னிப்பு வாங்கித் தரத்தக்கவர் நீர்! ஆனால், உம்மைத் தண்டிப்பது நீதிபதியல்ல; உம்மையும் நீதிபதியையும் ஒருங்கே சிக்க வைத்திருக்கும் சட்டந்தான்! உம்மைத் தண்டிக்காமல் தப்ப எனக்கு ஒரே வழிதானுண்டு; அது பதவி துறப்பு ஒன்றே. ஆனால், நான் செய்வதையே வேறொருவர் செய்வார். இதயசுத்தியுடன் என் கடமையாற்றுவதே மேல்” என்ற சொல்லும் குறிப்பும் நீதிபதியின் பேச்சில் தொனித்தன.