பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

அப்பாத்துரையம் - 12

அவர்தொடங்கிவைத்த போராட்டத்தை நிறுத்திக் கொள்கையை மாற்றுவது கூடாதென்று பலர் கருதினர். எனவே, கருத்து வேறுபாடு எழுந்தாலும், நடவடிக்கை மாறுபாடு இல்ாமல், பேரவை இயக்கம் முன்போலவே நடந்து வந்தது.

சென்னைத் தலைவர் ராஜகோபாலாசாரியார், ஸி.ஆர். தாஸ் கொள்கையை எதிர்த்தாலும், சென்னையிலேயே மற்றொரு பெருந் தலைவரான பண்டித மோத்திலால் நேருவும், சத்தியமூர்த்தி அய்யரும் அவரை ஆதரித்தனர். வங்க இளைஞர் தலைவரான சுபாஷ் போஸும், விடுதலையடைந்த பின் பாஞ்சாலத் தலைவர் லாலா லஜபதிராயும் அவர் பக்கம் நின்றனர். தாஸுக்கு வரவர ஆதரவு திரண்டது. அவர் பேரவைக் குள்ளேயே தம் கொள்கைக்கு ஆதரவாயிருந்தவர்களைக் கொண்டு 1922ல் 'தன்னாட்சிக் கட்சி' (சுயராஜ்யக் கட்சி) என்னும் ஒரு கட்சியை அமைத்தார். அதன் சார்பில் பிரசாரம் செய்வதற்காக அவர் பேரவைத் தலைமைப் பதவியையும், பேரவைக் குழுவில் தம் சார்பில் உள்ளவர்கள் பதவிகளையும் துறந்தனர்.

1923-ஆம் ஆண்டில் லாலா லஜபதி ராய், மௌலானா மகம்மது அலி ஆகிய இருவரும் விடுதலை அடைந்தனர். நாகபுரியிலும் தமிழகத்திலும் தேசியக் கொடிப் போராட்டம் நடந்த ஆண்டு இதுவே. திருப்பூர்க்குமரன் இப்போராட்டத்தில் காட்டிய வீரம் கட்டபொம்மன் வீரப்புகழை மீட்டும் தமிழக மண்ணில் நிலைநாட்டிற்று.

இவ்வாண்டு பேரவை இரண்டு தடவை கூடிற்று. முதற்பேரவை, செப்டெம்பர் 15ல் தில்லி நகரில் மௌலானா அபுல்கலாம் ஆஃஜாது தலைமையில் நடைபெற்றது. சட்டசபை நுழைவுக் கட்சிக்கும் அதன் எதிர்ப்புக் கட்சிக்கும் இடையே பிளவு நேர்வதை அப்பேரவை விரும்பவில்லை. ஆகவே, அது இரு கட்சியாரிடையேயும் ஒரு சமரஸத்தை உண்டு பண்ணிற்று. சட்டசபை நுழைவில் நம்பிக்கையுள் எவருக்கும் அதற்கான பிரசாரம் செய்யும் உரிமையையும் நடவடிக்கை எடுக்கும் உரிமையையும் அது அளித்தது. அதே சமயம், அதில் நம்பிக்கையில்லாதவர்கள் அதை எதிர்த்துப் பிரசாரம் செய்யாமல் விலகி நிற்கும்படியும் அது கோரிற்று.