பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

அப்பாத்துரையம் - 12

1927லேயே 'முழு நிறை விடுதலைக் கழகம்' (Independence League) ஒன்றை நிறுவியிருந்தார். இது முழு நிறை விடுதலைக்காகப் பிரசாரம் செய்தது. நேரு அறிக்கையையும் குடியேற்ற நாட்டுரிமையையும் இது எதிர்த்தது.

அடுத்த ஆண்டு பண்டித மோத்திலால் நேருவின் தலைமையில் நடைபெற்ற கல்கத்தா பேரவை புதிய குறிக்கோளுக்கும் பழைய குறிக்கோளுக்கும் இடையேயுள்ள போராட்டக் களமாயிற்று. பண்டித ஜவஹர்லால் நேரு இளைஞர் கட்சிக்குத் தலைமை வகித்து, முதியவர் கட்சித் தலைவரான தம் தந்தையாரையே தாக்கினார். காந்தியடிகள் பிளவைத் தீர்க்கும் நோக்கத்துடன் ஒரு சமரஸத் தீர்மானம் கொண்டு வந்தார். 1929-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 31-ஆம் தேதிக்குள் அரசியலார் நேரு திட்டத்தை ஒப்புக்கொள்ளா விட்டால் முழு நிறை விடுதலையே இந்தியாவின் குறிக்கோள் என்பதைப் பேரவை ஏற்றுக் கொள்ளும் என்றும், அதற்காக வரி கொடா இயக்கமும் ஒத்துழையாமை இயக்கமும் மீண்டும் தொடங்கப்படும் என்றும் காந்தியடிகளின் சமரஸத் தீர்மானம் குறிப்பிட்டது. இதை யாவரும் ஏற்றுக்கொண்டனர்.

1929ல் பண்டித ஜவஹர்லால் தலைமையிலேயே லாகூரில் கூடிய பேரவை, முழுநிறை விடுதலைத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

பேரவைக்குள் இடசாரி இயக்கம் வலுத்து வந்த அதே சமயம், வெளியே தீவிர இளைஞர்களின் உள்ளத் துடிப்பு, பயங்கர வாதத்தை வளர்த்து வந்தது. பாஞ்சாலத்திலும் வங்கத்திலும்அது பல இளைஞர்களையும் இளநங்கையர்களையும் பலி கொடுத்து வந்தது. பாஞ்சாலத்தில் சட்டசபையில் வெடிகுண்டு வீசச் சதி செய்த இளைஞர் லாகூர் சதி வழக்கில் குற்றவாளிக் கூண்டில் ஏறினர். சர்தார் பகவத்சிங்கு, சுகதேவ், ராஜகுரு என்ற மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. நாட்டு மக்கள் அவ்விளைஞர் முறையை ஆதரிக்கா விட்டாலும், அவர்கள் வீரங்கண்டு வியந்தார்கள். அவர்கள் உயிரைக் காக்கக் காந்தியடிகளே ஆட்சி முதல்வருடன் பேசி அரும்பாடுபட்டார். ஆனால், அவர்கள் தூக்குக்கயிற்றை முத்தமிடவே நேர்ந்தது.