பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. விடுதலைக் கோபுரவாயில்

பேரவையின் பொன் விழா

ஒரு தனி மனிதன் அல்லது ஒரு நிலையத்தின் வாழ்வில் 25- ஆம் ஆண்டு நிறைவை வெள்ளி விழா என்றும், 50-ஆம் ஆண்டு நிறைவைப் பொன் விழா என்றும், 60-ஆம் ஆண்டு நிறைவை மணி விழா என்றும் வழங்குவது மரபு. அணிமைக் காலங்களில் இந்திய மரபை ஒட்டி 80-ஆம் ஆண்டு நிறைவை முத்து விழா என்றும் கொண்டாடத் தொடங்கி யிருக்கிறோம்.

மூன்று தலைமுறைகளாக இந்தியாவின் வாழ்நாளையே தன் வாழ்நாளாக்கிக் கொண்டிருப்பது இந்தியப் பேரவை. அதன் வெள்ளி விழா, கிட்டத்தட்டச் சூரத்துப் பேரவையை அடுத்து வந்துள்ளது. அப்போதே அது விடுதலை மாநகர் எல்லையை அணுகிவிட்டது என்னலாம்; அப்போதே அது விடுதலைவாயிற் கோபுரத்தின் வீறுமிக்க தோற்றத்தைக் கண்ணாரக் காணத் தொடங்கிவிட்டது.

ஆனால்,1936ல் அது பொன்விழாக் கொண்டாடியபோது, விடுதலைக் கோயிலின் வெளிக்கோபுர வாயிலையே அஃது அணுகிவிட்டது என்னலாம். 1935லும் 1937லும் நடைபெற்ற தேர்தல்களின் பயனாக, அது அரசியலின் பொறுப்பேற்று ஆட்சி நடத்திய காலத்தைக் கோபுரத்தின் புறக்கூடமாகவும், 1942 முதல் 1947 வரை இரண்டாம் உலகப் போர்க்காலத்திலும் அதன் பின்னும் நடைபெற்ற விடுதலைப் பேச்சு வாதங்களை அதன் அகக் கூடமாகவும் நாம் கருதலாம்.

1945-ஆம் ஆண்டுப் பேரவை மணி விழா நடத்தியபோது, விடுதலையின் வெள்ளொளி அதன்மீது ஏற்கெனவே சுடர் வீசியிருந்தது. விழாக் கண்டவர்களின் விழா மணம் மாறுமுன் அவர்கள் திடுமென விடுதலை விழாவையே கொண்டாடும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாயினார்கள்.