இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(205
வகையில் குடிசைத் தொழிலில் கவனம் செலுத்தியது. பொருளியல் அறிஞரும் காந்தியடிகளின் அணுக்க மாணவருமான ஜே.ஸி.குமரப்பாவின் தலைமையில் அது 1934, டிசம்பர், 14-ஆந் தேதி திட்டம் தீட்டப்பட்டு, 1935 அக்டோபரில் நிறுவப்பட்டது.
பிற்காலங்களில் காந்தியடிகள் கல்வி, ஒழுக்க முறை ஆகியவற்றிலும் கருத்துச் செலுத்தி வார்தா கல்வித் திட்டம், காந்திய சேவா சங்கம் முதலியவற்றை இயக்கி வந்துள்ளார்.
1919-ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்களுக்குப் பின் இந்திய அரசியலமைப்பில் ஏற்பட்ட அடுத்த பெரு மாறுதல் 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசியற் சட்டமேயாகும். அதில் இரு பகுதிகள் அமைந்திருந்தன: ஒன்று, நடு அமைப்பாகிய கூட்டுறவரசு. இதில் இந்திய மன்னர் அரசுகளும் பிரிட்டிஷ் இந்திய மாகாண அரசுகளும் ஒருங்கே கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இத்துடன் வெளி நாட்டுறவு, பாதுகாப்பு, மலைவாணர் பகுதிகளின் ஆட்சி ஆகிய மூன்றும் இந்திய ஆட்சித் தலைவர் தனி உரிமையாக்கப்பட்டிருந்தன. ஆகவே, கூட்டுறவாட்சி பொறுப்பாட்சியாக அமையவில்லை; இரட்டை யாட்சியாகவே இருந்தது.
சட்டத்தின் மற்றப்பகுதி மாகாணத் தன்னாட்சியைச் சார்ந்தது. இதிலும் நடுவரசுக்குச் செய்தி இணைப்பு, போக்குவரத்து, வருமான வரித்துறை ஆகியவை ஒதுக்கப் பட்டிருந்தன. கூட்டுறவரசின் அமைப்புக்குப் பேரவையும் பிற கட்சிகளும் இணங்கி வரும்வரை, முதற் பகுதி செயல் துறைப்படுத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மாகாணத் தன்னாட்சி மட்டுமே தொடங்கி வைக்கப்பட்டிருந்தன.அத்துடன் மாகாண ஆட்சியிலும், அமைச்சர்கள் ஆட்சி அமைவு பெறாத போது மாகாண ஆட்சி முதல்வரே நேரடியாக ஆட்சி நடத்தும் உரிமை இச்சட்டத்தின் 93-ஆம் பிரிவினால் தரப்பட்டிருந்தது. தொகுதிகள் வகையில் 1919 சட்டத்தைப் போலவே பொதுத் தொகுதிகளும் தாழ்த்தப்பட்டவருக்கான ஒதுக்கப்பட்டபொதுத் தொகுதிகளும், முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர் ஆகியவர்களுக் கான தனித்தொகுதிகளும் இருந்தன.