பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(223

தொழிற்கட்சியின் முன்னேற்றக் கருத்துடைய உறுப்பினரும், இந்தியாவின் நண்பர்களுள் ஒருவராய் இதுவரை செயலாற்றி வந்திருந்தவருமான ஸர் ஸ்டிராஃவோர்ட் கிரிப்ஸ், மார்ச்சு 23- ஆந் தேதி இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவில் ஒரு மாத காலத்துக்கு மேல் தங்கி, இந்திய அரசியலாருடனும், பேரவைத் தலைவர் உட்பட்ட இந்தியாவின் எல்லா அரசியல் தலைவர்களுடனும் கலந்து, இந்தியாவில் புதிய தேசிய அரசாங்க அமைப்பு முறை பற்றிப் பேசினார். இந்தியர் பலரும் இப்புதிய மாறுதலை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர். இதனால் பெருநன்மை ஏற்படும் என்று யாவரும் நம்பியிருந்தனர்.பேரவைத் தலைவர்களும் மனம்விட்டு, கிரிப்ஸுடன் பேசினர். ஆனால், எப்படியோ பழைய முட்டுக்கட்டை நிலை மாறவில்லை. கிரிப்ஸ் திட்டம் முடிவடைந்தது. வந்தபடியே ஸர் ஸ்டிராஃவோர்ட் கிரிப்ஸ் 1942, ஏப்ரல் 12-ஆம் தேதி வெறுங்கையுடன் திரும்பிச் சென்றார்.

கிரிப்ஸ் திட்டத்தின் சிறப்புக் கூறுகள்

1. போர் முடிந்தவுடன் இந்தியாவின் புதிய அரசியலை அமைப்பதற்கான மக்கள் பிரதிநிதித்துவம் உடைய ஒரு

மன்றம் அமைக்கப்படும்.

2. அவ்வமைப்பில் பிரிட்டிஷ் இந்தியாவின் எந்த மாகாணமும் சேரலாம். சேராதவை பழைய அமைப்புடனே நீடிக்கவோ அல்லது சேர வேண்டுமென்று தீர்மானித்தால் சேரவோ இடம் இருக்கும்.

3. புதிய அரசியலமைப்புடன் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு கூட்டுறவு ஒப்பந்தம் செய்து கொள்ளும்.

பேரவையில் இத்திட்டம் நன்கு ஆராய்ந்து விவாதிக்கப் பட்டது. பல வகைக் கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. குணங்களும் குறைகளும் அலசி ஆராயப்பட்டன. இறுதியில் பேரவைக் குறிக்கோளாகிய முழு நிறை விடுதலையுடன் அது எவ்வகையிலும் ஒத்துவரவில்லை என்ற விளக்கத்துடன், அது மறுக்கப்பட்டது.