இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(227
ஸர்தார் பட்டேல் ஆகிய அனைவரும் தத்தம் கருத்துக்களை மனம் திறந்து வெளியிட்டனர். எல்லார் உள்ளங்களிலும் ஒரே வேதனையும் வெம்புயலும் வீசின. பேரவையின் வரலாற்றில் எல்லாத் தலைவர் உள்ளங்களும் இங்ஙனம் ஒரே மின்சாரத்தால் பிணைக்கப்பட்டது போல இயங்கிய மற்றொரு தறுவாயைக் காண முடியாது.
ஆகஸ்டு 8 தீர்மானம்
'ஆகஸ்டு எட்டுத் தீர்மானம்' என்று இந்தியாவின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் பொறிக்கப்பட்ட தீர்மானத்தைப் பண்டித நேரு கொண்டு வந்தார். ஸர்தார் பட்டேல் அதைப் பின்மொழிந்தார். பலர் ஆய்வாராய்வுகளுக்கு மறுமொழியாகப் பண்டித ஜவஹர்லால் மிக நீண்ட விளக்க உரை ஒன்று அளித்தார். அவர் அழகிய இலக்கிய நயம் வாய்ந்த மொழி நடைக்கு அதனினும் வீறுமிக்க முழு நிறை முழக்கச் சான்று வேறு காண முடியாது. அது பாதி ஆங்கிலமாகவும் மறுபாதி இந்துஸ் தானியாகவும் அமைந்தது. அதன் முக்கிய வாக்கியமாவது:
66
'இக்குழு இந்தியாவின் இன்றியமையாத தற்சார்பு நிலைமையையும் விடுதலையுரிமையையும் வலியுறுத்தவும்; அதுவகையில் அறமுறையிலேயே மிகப் பாரிய அளவில் ஒரு மாபெரு மக்கள் போராட்டத்தைத் தொடங்கி நடத்தி, அதன் மூலம் அமைதி வாய்ந்த, சென்ற 22 ஆண்டுக்கால அறப் போராட்டங்களால் மாநிலம் பெற்றுள்ள வலிமையைப் பயன்படுத்திக் காட்டவும் உறுதி கொண்டுள்ளது. அத்தகைய போராட்டத்தின் பொறுப்பு முழுவதும் காந்தியடிகளின் தலைமையின் கீழ்த்தான் அமையத் தக்கது. அத்தலைமைப் பதவியை ஏற்று வழிகாட்டி நாட்டை நாம் அவாவும் வெற்றிக் குறிக்கோள் நோக்கி நடத்திச் செல்லுமாறு செயற்குழு அவரைக் கேட்டுக் கொள்கிறது.”
காந்தியடிகள் மறுமொழி தண்கதிரின் தண்மையில் புதையுண்ட வெங்கதிரின் வெம்மையை ஒத்தது என்னலாம். அது நாட்டு மக்களுக்கு முன்னெச்சரிக்கையும் ஊக்கமும் உறுதியும் ஒருங்கே தந்தது. அதே சமயம் வீறும் பெருமிதமும் பொறுப் புணர்ச்சி பற்றிய கவலையும் அதில் கலந்திருந்தன.