இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(247
திட்டமான ஓர் அறிவிப்பு விடுத்தார். இந்தியக் கட்சிகள் தம்முள் ஒத்து வந்தாலும், ஒத்து வாராவிட்டாலும் பிரிட்டிஷார் எந்த ஒரு குழுவினிடமோ அல்லது சிலபல குழுக்களிடமோ தம் அதிகாரத்தை விட்டுக்கொடுத்துவிட்டு வெளியேறிவிடுவதாக அவர் உறுதி தெரிவித்தார்.
இந்தியக் கட்சிகளிடையே இவ்வறிவிப்புப் பெரும் பரபரப்பை உண்டு பண்ணிற்று.பிரிட்டிஷார் உள்ளக்கிடக்கையின் மீது இருந்த ஐய மனப்பான்மை பெரிதளவு குறைந்தது.நடுவரிடம் முறையிடும்போக்கு மாறித் தத்தம் நிலையில் தத்தம் போக்குப்படி கூடியமட்டும் மிகுதி அதிகாரத்தை ஏற்பதற்கு எல்லாரும் முன் ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், முஸ்லிம் சங்கம் இதனைப் பயன்படுத்திய வகை இப்போது புதிதாகவே இருந்தது. அது முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்களில் உள்ள முஸ்லிம் சங்கச் சார்பற்ற அரசியல்களைத் தகர்க்க முற்பட்டது. முஸ்லிம் வெறி உணர்ச்சி பஞ்சாபிலும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் கிளறப்பட்டது. இதனால், பஞ்சாபில் ஐக்கியக் கட்சி அரசியல் கவிழ்ந்து, ஆட்சி முதல்வரின் நேரடி அரசு அமைந்தது. லாகூர்,அமிர்தஸரஸ், முல்தான், ராவல்பிண்டி ஆகிய இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன. 4,000 பேருக்கு மேற்பட்டவர்கள் இவற்றில் கொலையுண்டார்கள்.
இடைக்கால அரசுக்குள்ளேயே இச்சமயம் திரு.லியாகத் அலிகான் கொண்டு வந்த பொருளியல் சட்டப்பகர்ப்பு இரு சமூகத்தாரிடையே மேலும் பிளவு உண்டுபண்ணிற்று. அது தொழில் முதலாளி வகுப்பினருக்குப் பேரளவில் பாதகமாய் அமைந்திருந்தது. இந்தியாவில் முதலாளி வகுப்பினர் பேரளவில் இந்துக்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆகவே, அது இந்துக்களை எதிர்த்தழிக்கும் முயற்சி என்று இந்து வகுப்பு வாதிகளால் எங்கும் பிரசாரம் செய்யப்பட்டது. பேரவை இதை நேரடியாக எதிர்க்கவும் முடியாமல், திறந்து ஆதரிக்கவும் முடியாமல் திணறடிக்கப்பட்டது. ஆதரித்தால், பேரவையின் பின்னனியிலிருந்த இந்து முதலாளிகள் எதிர்ப்பு ஏற்படும்; எதிர்த்தால், பேரவை முதலாளிகள் ஆதரவை நம்பியிருக்கிறது' என்ற எண்ணம் எழும். இந்த இரண்டகநிலை கண்டு பேரவைத் தலைவர்கள் புழுக்கமுற்றார்கள்.