264 ||-
அப்பாத்துரையம் - 12
அதற்குத் தொல்லைகள் மிகுதியாயிருந்தன. மாநிலத் தலைவர்களும் பேரவையும் நீடித்து அவாவிக் கனவு கண்ட விடுதலை, ‘கத்தியின்றி, இரத்தமின்றி' 1947ல் நனவாயிற்று.ஆனால், கனவு கண்ட விடுதலையுடன் கனவு காணாத பிரிவினையும் அதன் தொல்லைகளும் உடன்வந்தன. புதிய இந்தியாவின் இளந்தோன்றல்கள் மீதும் தலையின்மீதும் அவை சுமத்திய பளு மிகப்பெரிது. உலகின் எந்தப் புதிய அரசும் பிறந்தவுடனே இத்தகைய பெரிய இன்னல்களுக்கு ஆளானதில்லை. குடியரசின் பொறுப்பேற்ற தலைவர்களின் தனித்திறமைக்கு இவை நல்ல சோதனைகளாய் அமைந்தன. அவர்கள் இச்சூழ்நிலைகளுடன் போராடிப் பேரளவில் வெற்றி கண்டுள்ளார்கள்.
விடுதலையின்போது நேர்ந்த இடர்களில் மிகப் பயங்கர மானது விடுதலைக்குமுன் ஏற்பட்ட வகுப்புக் கலவரங்களும் பஞ்சாபு வங்காளப் பிரிவினைகளின்போது ஏற்பட்ட பேரளவான குடிபெயர்ச்சிகளுமேயாகும். விடுதலையின்போது நிலவிய வகுப்புக் கலவரப் படுகளம் விடுதலையின் தந்தையாகிய காந்தியடிகளின் உள்ளத்தில் பெருங்கவலையூட்டியது. விடுதலை விழாவைக் கொண்டாடக்கூட மனமின்றி அவர் வங்காளக் கலவரப் பகுதிகளிலேயே காலங்கழித்தார். பீகாரிலும் தில்லியிலும் பஞ்சாபிலும் கலவரங்கள் பரந்தபோது அவர் நிலைமையைச் சமாளிக்கத் தில்லியிலேயே வந்து தங்கினார். விடுதலை இந்தியாவின் புது வாழ்வில் ஓராண்டு கழியுமுன் வகுப்புக் கலவரம் என்னும் பேயுருவம் வளர்ந்தது. அது 1948, ஜனவரி,30-ஆந் தேதி அவர் உயிர் குடித்து இந்தியா முழுவதையும் ஆறாத்துயரில் ஆழ்த்திற்று.
வகுப்பு வெறியின் கோர தாண்டவத்தால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட இன்னலை எவரும் கணக்கிட்டு அறுதி செய்தல் முடியாது. இந்தியாவின் வரலாற்றிலேயே முதல் தடவையாக இந்துக்கள் முஸ்லிம்கள் ஆகிய இரு வகுப்புகளும் சரிசம அளவில் கொலை, கொள்ளை ஆகிய தீய வழிகளில் ஒருவருடன் மற்றவர் போட்டியிட்டனர்.பஞ்சாபுப் பிரிவினையின் போது சீக்கியிரின் உணர்ச்சிகளும் பெரிதும் புண்பட்டன.
இப்பிரிவினையை எதிர்த்த சீக்கியர் இந்தியப் பகுதி யிலுள்ள முஸ்லிம்களைத் தாக்கி வெளியேற்றத் தொடங்கினர்.