பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(266)

அப்பாத்துரையம் - 12

யோர் வீடும் குடியும் நிலமும் அற்றவர். ஆகவே, குடிபெயர்ச்சியினால் அவர்கள் அடைந்த பொருள் நட்டமும் இடுக்கண்களுங் குறைவே. பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்களோ, பெரும்பாலும் உயர்நடுத்தர வகுப்பினரும், வீடு குடிச்செல்வம் யாவும் மிகுதியாகவுடைய பெருவணிகரும், உயர் வகுப்பினரும் ஆவர். அவர்கள் இவ்வுடைமைகள் அனைத்தையும் விட்டு ஓடிவர வேண்டியவர்களானார்கள். ஆகவே, பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய அகதிகள் விட்டு வந்த வீடும் நிலமும் சொத்தும் எவ்வளவு எளிதாகப் பயன்பட்டனவோ, அவ்வளவு இந்திய அகதிகளுக்குப் பாகிஸ்தான் அகதிகள் விட்டுச் சென்ற எதுவும் பயன்பட முடியவில்லை.

வீடிழந்து, குடியிழந்து, உண்ண உணவுமின்றி அடிக்கடி அலைந்தோடி வந்த நூறாயிரக்கணக்கான மக்களுக்குத் தற்காலிகமாக உணவும் தங்கிடமும் கொடுக்கும் வேலையே விடுதலை அரசுக்குப் பல மாதங்களாக மிகப்பெரு வேலையாயிருந்தது. இந்தியாவின் பல பகுதிகளிலும் அவர்களுக்கு உணவும் உடையும் வழங்கித் தற்காலிக இடமும் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 56 இடங்களில் பெரிய தங்கிடங்கள் பெரும்பொருட் செலவில் அமைக்கப்பட்டன. ஆனால், இவற்றால் நிலைமை தற்காலிக மாகத்தான் சமாளிக்கப்பட்டது. அவர்கள் வாழ்வை நிலையாகச் சீரமைக்கும் வேலையில் நடு அரசுடன் தனியரசுகள் பலவும் ஒத்துழைக்க முன் வந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலும் அவர்களுக்காகப் புதிய குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. பேரளவில் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டு, அவற்றில் உழவுப் பண்ணைகளும் தொழிற் பண்ணைகளும் தொடங்கப்பட்டன. கிழக்குப் பஞ்சாபிலுள்ள சண்டீகர், பம்பாய் அரசிலுள்ள உல்லாச நகர், மேற்கு வங்கத்திலுள்ள ஹவ்ரா ஆகியவை இத்தகைய நகரங்களும் முக்கியமானவை.

தற்காலிகத் தங்கல்கள் வகையில் 1950 முடிவு வரையில் 32 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்யப்பட்டது. அத்துடன் பஞ்சாபு,பெப்சு என்னும் இடங்களிலுள்ள நிலப்பண்ணைகளின் மூலமும் குடியேற்ற நகரங்களின் மூலமும் வீடிழந்தவர்களில் 100 பேரில் 90 பேருக்கு வீடும், நிலமற்ற உழவர்களில் 100 பேரில் 96 பேருக்கு நிலமும் வழங்கப்பட்டு விட்டன.