270
அப்பாத்துரையம் - 12
உரிமைகளைப் பாதிக்காத தங்கள் உரிமைகளையும் அவர்கள் வைத்துக் கொள்ள மாநில அரசு இணக்கமளித்தது. ஆனால், ஆட்சி முற்றிலும் மாநில ஆட்சியின்கீழ்ப் படிப்படியாக ஒருங்கிணைக்கப் படலாயிற்று.
மிகப் பெரிய அளவிலுள்ள அரசுகள் அப்படியே தனியரசுகளாகக் கொள்ளப்பட்டன. மற்றவை இரண்டும் பலவும் ஒருங்கிணைக்கப்பட்டுப் பெருந்தொகுதிகளாக்கப்பட்டன.பெரிய தனியரசுகளும் அரசுத் தொகுதிகளும் பி வகுப்புச் சார்ந்த தனியரசுகளாக வகுக்கப்பட்டன.
அயலாட்சியின் சின்னங்களுள் மிக மோசமானவை, மன்னர் அரசுகளே. அதே சமயம் புதிய இந்தியாவின் சாதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க சிறந்த சாதனையும் அம்மன்னர் அரசுகளின் ஒருங்கிணைப்பேயாகும்.
மன்னர் அரசுகளில் தென்னிந்தியாவிலுள்ள பல அரசுகள் பாஞ்சாலங்குறிச்சிப் போர், மைசூர் போர் ஆகியவற்றின் அடிமை மரபுகள், வடவிந்தியாவில் அவை 1857புரட்சியைத் தடுத்து நிறுத்திய அடிமை மரபுகளாயின என்றும் கண்டோம். விடுதலை இந்தியா இவ்வடிமைச் சின்னங்களை வரலாற்றுச் சின்னங் களாக்கியுள்ளது.
தடங்கல்கள்: படிப்பினைகள்
விடுதலையாகிய நாள்மலருடன் நமக்குப் பிரிவினையாகிய முள்ளும் சேர்ந்தே கிட்டியுள்ளது. அயலாட்சியின் சின்னமாகிய மன்னரசுகள் அம்மலரினகத்திலிருந்து அணிவோருக்கு இன்னல் தரும் நச்சுயிர்கள் போன்றவை. நாம் மலரின் முள்ளைத் திறமையுடன் அகற்றிவிட்டோம். நச்சுயிர்களின்மீது அரசிய லிணைப்பாகிய நச்சுத் தடை மருந்தினைத் தூவி விட்டோம். மாநில விடுதலையாகிய மலரை, நாம், நம் அவாக்களாகிய நாரிழைகளில் தொடுத்து மாலையாகப் புனைந்தணியத் தொடங்கியுள்ளோம்.
மழை நிறை வளந்தருவது. ஆனால், அது அடை மழையாய், பெருமழையாய்த் தற்காலிகமாகச் செய்யும் அழிவுகளும் உண்டு. மழைக்கால முடிவில் சாய்ந்த மரங்கள் போக்குவரவுப் பாதைகளின் குறுக்கே விழுந்து வழியடைத்துக் கிடப்பதுண்டு.