பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

[273

இயக்கத்தையே கறைப்படுத்திய அத்தீமைகளின் வேர் நிலை கண்டு அவற்றை ஒழிக்க அவர்கள் நிலையான திட்டம் வகுக்க வேண்டும்.

பயிர்ப்பண்பு எது? களைப் பண்பு எது?

உழவன் விதை விதைத்துப் பயிரிடுகிறான், அதன் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறான். ஆனால், விதை விதைக்காமலே, உரமிடாமலே, அவன் கண்ணையும் கருத்தையும் தப்பி எப்படியோ களைகள் பெருகிவிடுகின்றன. களைகளை அகற்றித்தான் அவன் பயிரைக் காக்க வேண்டும். அது மட்டுமன்றிப் பயிர் அறுவடையாகிப் புதுப் பயிரிட்ட பின்னும் முன் அவன் பறித்த களைகளின் வேர்களிலிருந்தே புதுக்களைகள் அழையா விருந்தாய் வந்து புகுகின்றன.

அயலாட்சிக்கும் அடிமைத்தனத்துக்கும் காரணமான களைப்பண்புகள் விடுதலைப் போராட்டத்துக்கு முன்பே தேசிய மண்ணில் கரந்திருந்தன. அயலாட்சி இப்பண்புகளை ஊக்கி யிருக்கலாம். இது இயல்பாக எதிர்பார்க்கத்தக்கதே. ஆனால், அயலாட்சி இவற்றை உண்டு பண்ண முடியும் என்பதை எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார். எப்படியும் இப்பண்புகள் ஊக்கம் பெற்றோ, பெறாமலோ, தேசிய நிலத்தில் மறைந்திருந்து, நம் விடுதலை உழவராகிய தேசத் தலைவர்களின் உழவுச் சால்களுக்குத் தப்பி வளம் பெற்று வளர்ந்துவிட்டன என்பது மட்டும் நமக்குப் புலனாகிறது.

விடுதலைப்போராட்டத்தின்போது களைகளாய் வந்து விடுதலைப் பயிரை அழிக்க முயன்ற இக்குறைபாடுகள், அறுவடையின் பின் விடுதலையூழியின் புதுப்பயிர் தொடங்கும் போதும் நம் களைக்கொட்டுக் கருவிகளின் கடமைக்குக் காத்தேயிருக்கின்றன. 'விடுதலையின் பயன் ஓய்வு அன்று; ஓயா விழிப்பு', என்பதனை இந்நிலை நமக்கு நினைவூட்டுகிறது.

நம் விடுதலை இயக்கத்தின் போராட்டப்படி முடிந்து விட்டது. ஆனால், இயக்கம் முடிந்துவிடவில்லை. ஏனெனில், அதுவே நம் வாழ்வு. விதையாது வளரும் களைப்பயிர் இதையே நமக்கு எச்சரித்துக் காட்டுகிறது.