இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
(275
உடனுண்ணாதிருக்க, உறவு கொண்டு கலக்காதிருக்கக் கூட எந்தச் சமூகத்தடையோ சமயத்தடையோ நிலையான வடிவில் மற்ற நாடுகளில் இல்லை. ஆனால், இந்தியாவில் ஒரு மாகாணங்கூட, ஒரு நகரம் அல்லது ஒரு வீடுகூட,வெளியுலகம் பல நூற்றாண்டு களுக்கு முன்பே அடைந்துள்ள இந்த ஒற்றுமையை எளிதில் அடைய முடியவில்லை. உலகத்தில் எத்தனை பிறப்பு வேறுபாடுகள், நிற வேறுபாடுகள் இருக்கக்கூடுமோ, அவற்றை விட மிகுதியான வேறுபாடுகள் பாரத நாட்டின் ஒரு சிற்றூரில், ஒரு தெருவில் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது.அதற்கு நாம் எத்தனை திறமையான விளக்கம் தந்தாலும், அது அருவருப்பை அழகாக வருணிக்கும் கவிதை வேதாந்தமாகக் கூடுமேயன்றி, நம் மதிப்பை உலகில் உயர்த்த ஒருபோதும் உதவாது. நம் தேசத்தை ஒரு தேசமாக்க முயலுபவர் எவரேனும் இதில் கருத்துச் செலுத்தாதிருந்தால், அது போன்ற மடமை அல்லது நாட்டுப் பகைமைப் பண்பு வேறு எதுவும் இருக்க முடியாது.
பேரவை தோன்றும் காலத்துக்கு முன்பே பிரமசமாஜப் பெரியார்களும் ஆரியசமாஜப் பெரியார்களும் தத்தம் கருத்துக் கோணத்திலிருந்து இக்களைப் பண்புகளை நீக்க முயன்றதுண்டு. பேரவை தொடங்கும் காலத்தில் திரு.ஏ. ஓ.ஹியூம், அதை ஒரு சமூகச் சீர்திருத்தப் பேரவையாகவே கனவு கண்டிருந்தார். ஆட்சி முதல்வர் டஃவ்வரின் பெருமகனார் அதை ஓர் அரசியற் பேரவையாக்கும்படி கூறியது சால்புடையது என்பதில் ஐயமில்லை. ஆனால், சமூக சமயச் சீர்திருத்தத்தில் பொதுவாகப் பேரவை வரவரக்குறைந்த ஈடுபாடே காட்டியிருந்தது என்பது உண்மை. தென்னாட்டில் பேரவைக்கு வெளியே வளர்ந்த நேர்மைக் கட்சியும், பேரவையிலிருந்தே கிளைத்து வெளியே பெரியார் ஈ.வே. இராமசாமியாரின் தலைமையில் வளர்த்த தன்மான இயக்கமும், தூயதிரு மறைமலையடிகளார் தலைமையில் தோன்றிய தமிழ் இயக்கம் சமயச்சீர்திருத்த இயக்கம் ஆகியவையும் இவ்வகையில் நல்லெச்சரிக்கைகள் தந்தன. தென்னாப்பிரிக்காவில் தமிழரிடையே வாழ்ந்து பணியாற்றிய காந்தியடிகள் இதன் முனைப்பான சில கூறுகளைப் பேரவை இயக்கத்தின் ஆதரவில் தனி இயக்கங்களாக வளர்க்கப் பாடுபட்டார்.ஆனால், தென்னாட்டின் முழுப்படிப்பினைகளைப் பேரவை இயக்கம் மேற்கொள்ள முடியாது போயிற்று.