276 ||-
தமிழகம் தரும் ஒளி
அப்பாத்துரையம் - 12
இந்தியாவில் சமூகச் சீர்திருத்தத்தில் முனைபவர் சமயத்துடனும், மொழி, கலை, இலக்கியத் துறைகளுடனும் மோதிக் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை. ஏனென்றால், சாதி முறை அவற்றின் வாழ்விலெல்லாம் புகுந்துள்ளது. சிறப்பாக, சமயம் மொழி ஆகிய இரு துறைகளிலுமே சாதி மரபு நலிய விடாமல் காத்துவரும் குழு நலன்கள் பேணப்படுகின்றன. சமூகத்திலுள்ள சாதி முறையை இந்தியாவின் சமயம் வருணாச்சிரம முறையாக்கி வலியுறுத்திக் காத்து வளர்க்கிறது. உயர் சாதிக்குழுவினர் சாதி முறைமைப் பாதுகாப்பையே சமயப் பாதுகாப்பு என்று கூறி, அதற்கு வலுத்தேடுகின்றனர். இந்தியாவின் இடைக்காலப் புராண இதிகாசங்கள் இதற்கான பிரசாரக் கருவிகளாய் மக்கள்மீது சுமத்தப்படுகின்றன. பண்டை உபநிடதப் பண்புகளைவிட இவற்றின் பண்புகளையே சாதிநலக் குழுவினர் சமயப் பண்பாக வளர்க்க நீண்ட காலமாக முனைந்துள்ளனர். இக்காரணத்தினால் சாதி நலக் குழுவின் கையில் பட்டுச் சமயத்துறையில், போலி இடைக்காலப் பண்புகளும், மொழித்துறையில், வடமொழி அல்லது சம்ஸ்கிருத ஆதிக்கமும் சாதி எதிர்ப்பை ஒழிக்கும் வகையில் ஒப்பற்ற கருவிகளாய் அமைகின்றன.
தென்னாட்டில் பொதுவாகவும், தமிழகத்தில் சிறப்பாகவும், சாதி எதிர்ப்பு, சமயச் சீர்திருத்தம், வடமொழி ஆதிக்க எதிர்ப்பு ஆகிய மூன்றும் இணைந்து செயலாற்றி வருகின்றன.தமிழகத்துக்கு வெளியே இம்முறைகளின் ஒருமைப்பாடு உணணரப் படவில்லை. இது காரணமாகவே, பிற்போக்காளர் சமூக முற்போக்குக் கருத்துகளைச் சமூகம், சமயம், மொழி ஆகிய மூன்று துறைகளிலும் தனித்தனி பிரித்து வைத்து, ஒரு துறை முற்போக்காளரைக் கொண்டே மற்றொரு துறை முற்போக்கைத் தடைப்படுத்திவிட முடிகிறது.
முஸ்லிம் சங்கத்தை முஸ்லிம் வகுப்புவாத சங்கம் என்றும், இந்துப் பேரவையை இந்து வகுப்புவாத சங்கம் என்றும் நாம் கருதுவது இயல்பு. ஆனால், தேசிய நோக்குடன் இவற்றின் வளர்ச்சியை உற்று நோக்கினால், வகுப்புவாதம் இவற்றிடையே எவ்வாறு வளர்ந்தது என்பதைக் காணலாம். இந்துப் பேரவை