இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
15
இப்போது அடிப்படை மனித உரிமைப் பகுதி அரசியலமைப்பில் ஓர் உறுப்பாய் மட்டுமே இருக்கிறது. அத்துடன் அது அச்சட்டத்துக்கு அழகு தரும் ஒரு குறிக்கோளையும் மிளிர்கிறது. ஆயினும், நாட்டின் புற ஒற்றுமையும் புறப் பாதுகாப்பும் உறுதியாக நிலைபெற்ற பின்பு, அவையே அடிப்படைச் சட்டமாய்விடத்தக்கவை. அரசியலும், அரசியல் சட்டங்களும், அரசியலமைப்பும் அவற்றின்மீதே புதியனவாகக் கட்டமைக்கப் பெற வேண்டுபவை. அதற்குள் மாநில உரிமைகள் கூட்டரசிலிருந்து படிப்படியாக இறங்கித் தனி மனிதர் வரை வந்து நிலைபெற்று விடும். அதாவது, மாநிலம் பெற்ற உரிமைகள், மாநிலத்தின் பகுதிகளாகிய தனி அரசுகளுக்கும்; தனியரசுகள், பெற்ற உரிமைகள், அவற்றின் உட்பிரிவுகள், மொழியினங்கள், பண்பாட்டினங்கள் ஆகியவற்றுக்கும்; இறுதியில் இவற்றைத் தாண்டி அரசியலின் அடிப்படை உறுப்பான தனி மனிதனுக்கும் சென்று சேரும். தனி மனித உரிமைகள் அடிப்படை மனித உரிமைகள் என்றும்; மாகாணங்கள் தனியரசுகள் என்றும்; மாநில அரசு கூட்டரசு என்றும் இப்போதே குறிக்கப்படுவது இதனை எதிர் நோக்கியேயாகும்.
சிறுபான்மைப் பாதுகாப்புரிமைகள்
தனி மனிதன் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது அவன் கடமை ஒன்றே. அதுவும் பிறர் உரிமைகளை பாதுகாப்பதற் காகவே அமைந்தது. இவ்வுரிமைகளையும் இவற்றின் பாதுகாப்பான கடமைகளையும் சரிசம நிலையில் வைத்துப் பேணவே 'சமூகம்' என்னும் அமைப்பும் ‘அரசு' என்னும் அமைப்பும் மனித நாகரிகத்தில் இடம் பெற்றுள்ளன. உரிமைகள் வரம்பு மீறாதிருக்கக் கடமையையும், கடமைகள் அடிமைப் பண்பாகித் தேயாமல் இருக்க உரிமையையும் குடியாட்சிப் பண்பு சரிசம அளவில் எல்லாருக்கும் பரப்பக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், பல சமயம் குடியாட்சியில் கூடத் தனி மனிதன் உரிமைகளை மற்றத் தனி மனிதர் உரிமைகளே பாதிக்க வழி ஏற்படுவதுண்டு. ஏனென்றால், குடியாட்சி என்பது நடைமுறையில் தற்காலிகப் பெரும்பான்மையின் ஆட்சியாகவே இருக்க முடியும். சமூகத்திலும் சரி, அரசியலிலும் சரி, பெரும்பாலாரே