16
அப்பாத்துரையம் - 12
கட்டுப்பாடும் சட்டமும் வகுக்கின்றனர். ஆயினும், பொதுவாகச் சிறுபான்மை அடிக்கடி பெரும்பான்மை யாகவும், பெரும்பான்மை அடிக்கடி சிறுபான்மையாகவும் மாறும் இயல்புடையன. இது ஒன்றே இவ்விடங்களில் சிறுபான்மைக்குப் பாதுகாப்பளிக்கும்.
ஆனால், மொழி, பண்பாடு ஆகியவை சார்ந்த தனியினங் களோ, பொருளியல், கல்வி, வாழ்க்கை வசதிகள், ஆகியவற்றில் பிற்பட்ட வகுப்பினரோ உள்ள இடங்களில், சிறுபான்மைகள் ஏறத்தாழ நிலையான சிறுபான்மைகளாகி விடுவதுண்டு.இன்னும் சில சமயம், பெரும்பான்மை கூட, அரசியல் விழிப்பு இன்மையால், சிறுபான்மைபோல இயங்க இடமேற்பட்டு விடுகிறது. இத்தகைய சிறுபான்மைகளின் தனி உரிமைகளுக்கு அப்போது இடையூறுகள் ஏற்படக்கூடும். இதனால், எல்லாரும் எல்லாரையும் ஆளும் அரசாகிய குடியாட்சியின் பண்புக்கு ஊறு ஏற்பட்டு விடும். இதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே தனி மனித உரிமைகள் மட்டுமன்றிச் சிறுபான்மைப் பாதுகாப்புரிமைகளும் தனியாக வகுக்கப்பட்டுள்ளன.
குடியாட்சியின் உயிர் மூச்சுக்கள்
குடியாட்சியின் இயக்கம் ஓர் இயந்திரக் கருவியின் இயக்கம் போன்றது. உரிமைகள், கருவியின் சுழல் சக்கரங்கள். கடமைகள், சக்கரங்களைத் தேய்வும் உராய்வுமின்றி எளிதில் சுழல வைக்க உதவும் மசக்கெண்ணெய் போன்றவை. ஆனால், கருவி இயங்க இவை மட்டும் போதா. கருவியை இயக்கும் திறமுடைய இயந்திர ஆற்றலும் வேண்டும். இயந்திரப் பொறித்துறையில் நீராவி, நிலக்கரி ஆகியவற்றிலிருந்து நாம் இவ்வாற்றலைப் பெறுகிறோம். குடியாட்சியும் இதேபோன்ற ஓர் ஆற்றலின்றி இயக்கப்பட முடியாது.இவ்வாற்றல் ஆளப்படும் மக்களின் உரிமையார்வமும், வாழ்க்கையார்வமும், ஆள்பவரின் கடமையார்வமுமேயாகும். இவற்றையே குடியாட்சியின் உயிர் மூச்சுக்கள் என்னலாம்.
குதிரையை வற்புறுத்தித் தண்ணீர்த் துறைக்குக் கொண்டு செல்ல முடியும். ஆனால், அதை வற்புறுத்தித் தண்ணீர் குடிக்கச் செய்ய முடியாது” என்னும் ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. குடியாட்சியின் ஒரு பண்பை இது