பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

17

நினைப்பூட்டுகின்றது. முடியாட்சியையோ, மற்ற ஆதிக்க ஆட்சிகளையோ, ஆட்சியாளர் மக்கள் மீது சுமத்திவிடலாம். குடியாட்சி அத்தகையதன்று. அது மக்கள் உள்ளத்திலிருந்தே; மலர வேண்டும். ஆதிக்கப் பனிக்காற்று அதன் மலர்ச்சியைத் தடை செய்யும். விடுதலைத் தென்றலே அதைத் தளிர்க்கச் செய்யவல்லது. வாழ்க்கையார்வம் என்னும் வண்டிசையே அதை இதழ் அவிழச் செய்யும். ஆதிக்க ஆரவாரம் அதை வாட்டி வதக்கி உதிர்த்துவிடும். மக்கள் ஓர் ஆட்சியை விரும்புவதோ, விரும்பி வரவேற்பதோ, ஆர்வத்தோடு அதனுடன் ஒத்துழைப்பதோ, ஆட்சியாளர் கட்டுப்பாட்டில் அடங்கியன்று. மக்கள் அவா, ஆர்வம், கனவார்வம், நல்லெண்ணம் ஆகியவற்றை அரசியலார் தூண்டுவதால் மட்டுமே அது நிறைவேறக்கூடும்.

தாய்மொழிக் கல்வி

விடுதலை இந்தியாவில் இப்போது ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மொழியுரிமை வயது வந்த ஆடவர் பெண்டிர் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஏற்பாடே. இதனால், ஓரளவு அரசியல் விழிப்பும் அரசியலார்வமும் ஏற்பட இடமுண்டு. ஆனால், இதனைப் பயன்படுத்துவதற்குத் தக்க பொது அறிவும் தாய்மொழிக் கல்வியும் பொதுமக்களிடையே இன்னும் வளரவில்லை. மீனுக்கு நீரும், பறவைக்குக் காற்றும் எவ்வளவு இன்றியமை யாதனவோ, அவ்வளவு பொது மக்களுக்குத் தாய்மொழிக் கல்வி இன்றியமையாதது. அது அகல் வெளிக் காற்றும் கதிரவனொளியும் போல, மக்களுக்கு எங்கும் தங்குதடையின்றிக் கிடைக்க வகைசெய்ய வேண்டும். அக்கல்வி ஒன்றினாலேதான் மக்கள் விலங்கு நிலையைக் கடந்து மனித நிலையையடைவார்கள். அதனாலே தான் மனித அவாக்களும் ஆர்வங்களும் அவர்கள் உள்ளத்திலே முளைவிட முடியும். கதிரவனொளி இல்லாத போது தற்காலிகமாக உதவும் விளக்கொளிபோல, அயல் மொழித் தொடர்பு தற்காலிகமாகவே உதவியளிக்க முடியும்.

‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’

பொது மக்களுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட வேண்டுமானால், அவர்களுக்கு முதலில் தங்கள் வாழ்வில் ஆர்வம்