இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
புதிய இந்தியாவும் புதிய உலகும்
25
நம் மாநிலம் உலகின் ஒரு சிறிய பதிப்பு என்றோம். அதற்கேற்ப, மாநிலத் தலைவர்களும் தொலைநோக்குடைய மக்களுலகத் தலைவர்களாகவே காட்சியளிக்கின்றார்கள். மாநிலத்தின் மாபெரும் பரப்புக்கும் மாண்புடைப் பண்புகளுக்கும் ஏற்ப, அவர்கள் தேசிய நோக்கம் சர்வ தேசியக் கண்ணோட்டமுடையதாகவே அமைந்துள்ளது. மாநிலம் ஒரு சிறிய உலகமாயிருப்பது, இவ்வகையில் ஒரு குறைபாடாய் இல்லை. உலகத்துக்குப் பெறற்கரிய அருமருந்தாக, ஒரு நிறை பண்பாகவே அது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,” என்ற அருட் பண்புடையவர் பண்டைத் தமிழகச் சான்றோர். பண்டைத் தமிழக மரபு பயின்ற மாநிலப் பண்பும் இதே பரந்த மனப்பான்மையை வளர்க்க முனைந்துள்ளது. “யாம் பெற்ற விடுதலை பெறுக இவ்வையகம்”, என்று புதிய இந்தியா விடுதலைப்பண்பாடத் தொடங்கிவிட்டது. வீழ்ந்துபட்ட ஆசியாவின் விழுப்புண் துடைக்க, கீழ்த் திசையின் எழுஞாயிற்றுக் கொடியை வீறுடன் பறக்கவிட, அது 'மடிதற்று' முன் வந்துள்ளது. சோர்ந்து தளர்ந்த பல நாடுகள், இனங்கள், மக்கள் நாடி நரம்புகளில் அதன் விடுதலைப் பண் முறுக்கேற்றி வருகிறது. புதிய இந்தியா, புதியதோர் உலகைப் படைக்க உறுதுணையாய் உதவும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
புதிய உலகைப் படைக்கும் புதிய இந்தியாவை ஆக்குகிற பொறுப்பிலும் புகழிலும் இந்திய மாநில மக்களாகிய நம் அனைவருக்கும்- ஆடவருக்கும் பெண்டிருக்கும்- முதியவருக்கும் இளைஞருக்கும்- சிறப்பாக மாணவருக்கும் மாணவியர்க்கும்- தனித்தனி பங்கும் தனித்தனி உரிமையும் உண்டு. அதற்கான திட்டங்கள் வகுப்பதிலும், அவ்வகையில் தங்கள் அவா ஆர்வங்கள், கனவார்வங்கள் மூலம் மக்கள் அவா ஆர்வங்களையும், கனவார்வங்களையும் தூண்டுவதிலும், வருங்கால மக்களாகவும், ஆட்சியாளராகவும், மதி நலம் படைத்த அறிஞர்களாகவும் விளங்க இருக்கும் மாணவ மாணவியர்களே முன்னணியில் நின்று பணியாற்ற வேண்டும்; அவர்களே மக்களை முன்னோக்கி நடத்திச் செல்ல வேண்டும்.