பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 12

பேரளவில் சிந்துவெளி நாகரிகத்தின் மரபுகளும் பண்புகளுமே ன்று காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத்து முதல் வங்கம் வரையிலும் இந்தியாவின் பரந்த அடிப்படை நாகரிகமாய் வளர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியராகிய நமக்கு இதில் இன்னும் சிறந்த தனிப்பங்கு உண்டு. வரலாற்றுக் காலத்தில் பல வெளியினங்களின் படையெடுப்பாலும், பண்பாட்சியாலும், வடவிந்தியாவின் பண்பில் ஓரளவு மாறுபாடுகளும் சீர்குலைவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் கிழக்குப் பகுதியும் தெற்குப் பகுதியும் இவற்றிலிருந்து ஒதுங்கியுள்ளன. ஆகவே, இவற்றின் பண்பாடு பெரிதும் பழைய சிந்துவெளி நாகரிகத்தின் வழி நின்று, தூய இந்திய நாகரிகமாய் நிலவியுள்ளது. தெற்கே தமிழகத்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் தழைத்த சங்க இலக்கிய மூலம், சிந்துவெளி நாகரிகத்தின் பல கூறுகளும் அமைந்த ஒரு நாகரிகம் இங்கே நிலவியதென்பதைக் காணலாம். புதைகுழி மாடங்களும், நடுவு நிலை யுணர்வும், ஒப்புரவுப் பண்பும் வாய்ந்த சமயச் சார்பற்ற சமூக இலக்கியமும் இவற்றுள் குறிப்பிடத்தக்க கூறுகள் ஆகும்.

இன்றைய தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகியவையும், சிறுபான்மையாக வடவிந்தியாவில் நிலவும் சில மொழிகளும் திராவிட மொழிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளன. இம்மொழிகளைப் போலவே சிந்துவெளி நாகரிகமும் திராவிடச் சார்பானதென்று ஆராய்ச்சி யாளர் ஒருமுகமாகக் கருதுகின்றனர். இந்தியாவில் ஆரியர் வந்தபின் எழுந்த முதல் எழுதா இலக்கியமான இருக்கு வேதமும் இதற்குச் சான்று பகர்கின்றது. பாம்பையும் இலிங்கங்களையும் இம்மக்கள் வணங்கினார்கள் என்றும், இவர்கள் பெருஞ்செல்வ முடையவர்களாய்க் கோட்டைகளையும் நகரங்களையும் கொண்டிருந்தார்கள் என்றும், இவற்றைத் தகர்க்கவே ஆரிய முனிவர் இந்திரன் முதலிய தேவர்களின் உதவி நாடி வழிபட்டனர் என்றும் நாம் அறிகிறோம்.

ஆரிய நாகரிகம்- நான்கு படிகள்

ஆரியர்களின் மூலத்தாயகம் எது என்பதை வரையறுத்துக் கூற முடியவில்லை: சிலர் நடு ஆசியா என்றும், என்றும், சிலர் ரஷ்யாவிலுள்ள வால்கா ஆற்று நிலம் என்றும் கூறுகின்றனர்.