38
அப்பாத்துரையம் - 12
மட்டும்வந்து எட்டியுள்ளவை உண்டு. இந்து மதத்தின் உட்கூறுகளாக இன்றும் கருதப்படும் அகச்சமயம் ஆறு, புறச்சமயம் ஆறு என்பன போன்றவை உண்டு. கட்டற்ற அறிவுக் கோட்பாடுகளான நாத்திகம், உலோகாயதம், மாயா வாதம், அளவை வாதம் முதலிய பலவற்றைப் பற்றிய செய்திகள், பிற்காலத்தவர் கண்டன மூலம் நமக்குத் தெரிய வருகின்றன.
இக்கோட்பாடுகளுள் ஆறு தனிப்படத் ‘தரிசனங்கள்’ என்று வகுக்கப்பட்டு,இன்று இந்துமத அறிவாராய்ச்சியுள் இடம் பெற்றுள்ளன. அவையே பூர்வமீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை, சாங்கியம், யோகம்,நியாயம், வைசேடிகம் என்பவை.
புத்த சமண சமயங்கள்
வை தவிர, இவற்றுள் ஒரு கோட்பாடே இன்று இந்தியாவுக்குத் தனிச்சிறப்புத் தரும் சமயங்களுள் ஒன்றான சமண சமயமாய் நிலவுகிறது. இதனைத் தோற்றுவித்தவர் மகாவீரர் என்பவர். இவர் கி.மு.6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கோட்பாட்டை முதன்முதல் வற்புறுத்திய சமயமும், முதன்மையாக வற்புறுத்தும் சமயமும் இதுவே. உலகிலேயே விலங்குகளுக்கு மருத்துவ நிலையங்களை முதன்முதல் அமைத்த சமயமும் இதுவே.
கி.மு.6-ஆம் நூற்றாண்டிலேயே எழுந்த மற்றொரு சமயம் புத்த சமயம் ஆகும். இதுவும் சமண சமயத்துடன் இந்தியாவில் கி.பி.5-ஆம் நூற்றாண்டு வரை ஓரளவு நிலவிப் பின் இந்திய வாழ்விலிருந்து பெரிதும் மறைவுற்றது. ஆயினும், கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசனான அசோகன், கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசனான கனிஷ்கன் ஆகியவர்களின் முயற்சியால் இது உலகில் மேற்கும் தெற்கும் கிழக்கும் பேரளவில் பரவியது. இன்று திபெத்து, சீனா, ஜப்பான், தென்கிழக்கு ஆசியா, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளெங்கும் இதுவே முக்கிய சமயமாய் இயங்குகிறது. இந்தியாவில் பிறந்து உலகில் வளர்ந்த உலகப் பெருஞ்சமயமாய் இது விளங்குகிறது.