பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

41

வடநாட்டில் சிசுநாகரையடுத்து நந்தரும், நந்தரையடுத்து மௌரியரும் ஆண்டனர். அதன்பின் வடநாட்டுப் பேரரசுகள் நலிய, தெற்கே ஆந்திரப் பேரரசு தலை தூக்கிற்று. கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபெரும்பகுதியை ஆண்டவர்கள் ஆந்திரர்களே. சேரன் செங்குட்டுவனது வடநாட்டுப் போரில் ஆந்திரர் அவனுடன் சேர்ந்து சண்டை செய்தனர் என்றும், வடநாட்டில் தோற்ற மன்னன் கனகன், பேரரசனான கனிஷ்கனே என்றும் வரலாற்றாசிரியர் சிலர் கருதுகின்றனர்.

மூன்றாம் நூற்றாண்டில் இவ்வெல்லாப் பேரரசுகளும் வீழ்ச்சியடைந்தன. வடக்கே குப்தரும், டை நாடுகளில் சாளுக்கியரும், தெற்கே சேர சோழ பாண்டியருக்குப் போட்டியாகக் காஞ்சீபுரத்தில் பல்லவரும் எழுந்தனர். இவ்வெல்லா அரசரும் வடமொழியும் பாலி பிராகிருத மொழிகளும் பேணினர்.

பத்தி இயக்கம்

தென்னிந்தியாவில் இந்தச் சூழலிடையேதான் கி.பி.3-5ஆம் நூற்றாண்டுகளில் பத்தி இயக்கம் தொடங்கிற்று. சைவ சமயச் சார்பான முதல் நாயன்மார்களும், வைணவ சமயச் சார்பான முதல் ஆழ்வார்களும் தோன்றிய காலம் இதுவே. 7-ஆம் நூற்றாண்டில் தலைமையான நாயன்மார்களும் தலைமையான ஆழ்வார்களும் தோன்றிய பின் பத்தி இயக்கம் பெருவெள்ள மாயிற்று. 8-ஆம் நூற்றாண்டில் நீலகண்டர், சங்கரர் முதலிய முதல் ஆசாரியர்கள் உதவியால் இவ்வியக்கங்கள் முழு நிறைவும் சமயத்துறை ஆதிக்கமும் பெற்றன. ஆனால், இந்த இரு சமயப் பத்தி இயக்கங்களுள் சைவச் சார்பான இயக்கம் தென்னாட்டுடன் பெரிதும் நின்றுவிட்டது.கன்னட நாட்டில் 12-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை சைவ இயக்கம் புத்துருவில் வீரசைவ இயக்கமாய்த் தழைத்தது. ஆனால் வைணவ பத்தி இயக்கம், 12-ஆம் நூற்றாண்டில் தமிழகப் பெருந்தலைவரான இராமானுசர் ஆதரவால் இந்தியாவெங்கும் பரவிற்று.

கன்னட நாட்டில் மாத்துவாசாரியாரும் வங்க நாட்டில் சைதன்னியரும் இராமானுசர் தந்த வைணவப் பத்தி