இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
45
பெருநர் ஆட்சிகளும் இருந்தன. இவை தவிர, தென்னாட்டிலும் வடநாட்டிலும் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை பல குடியரசுகளும் பல கூட்டுக் குடியரசுகளும் நிலவின.
சேர அரசு பேரரசாயினும், 6-ஆம் நூற்றாண்டு வரை ஒரு பெரிய கூட்டுக் குடியரசாகவே நிலவியிருந்தது. தொடக்கத்தில் சேரர் ஏழரசுகளின் கூட்டுறவுத் தலைவராயும், சோழர் பாண்டியர் பல அரசுகளின் தலையரசராகவுமே இருந்தனர். ஆனால்,எக்காலத்தும் இவர்களுக்கு உட்படாத வேளிர் அல்லது சிறு குடியரசரும் இருந்தனர். ஆந்திரரும் கலிங்கரும் பேரரசால் அடக்கப்படாத காலத்தில் கூட்டுக் குடியரசாகவே நிலவியதாகத் தெரிகிறது.
வடமொழியில் சதகர்ணி என்றும் தமிழில் நூற்றுவர் கன்னர் என்றும் வழங்கப்பட்ட ஆந்திரர் பெயரே, 'நூறு குடிகளின் கூட்டு' என்னும் பொருள் உடையதாயுள்ளது. கௗதம புத்தர் பிறந்த சாக்கியர் குடியும், குப்த மன்னர்களுக்குப் பெண் கொடுத்து அவர்கள் வலிமையைப் பெருக்கிய லிச்சாவிக் குடியும், வைசாலி நகர் ஆட்சியும் வரலாற்றில் பேரரசரும் அஞ்சத்தக்க வலிமையுடைய குடியாட்சிகளாய் இருந்தன.
'இந்தியாவில் பழங்காலத்தில் முடியாட்சியன்றிக் குடியாட்சி மரபு இல்லை', என்னும் கூற்று முற்றிலும் தவறு என்பதை இதனால் காணலாம்.
ஆனால், குடியாட்சி, நகராட்சி, தொழில்வளம், கடல் வாணிகம், சமயச்சார்பற்ற சமூக நாகரிகம் ஆகிய யாவும், வரலாற்றுக் காலத்தில் படிப்படியாய் வளங்குறைந்து வந்தன என்பதில் ஐயமில்லை. இது பெரிதும் வெளியார் படையெடுப்புக் களின் பயன் என்று கூறுவது தவறன்று. ஏனெனில், வடமேற்கு மூலையிலிருந்தே இவற்றின் சீரழிவு மிகுதியாகின்றது. மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய நான்கு புறங்களிலும் ஒதுங்கிய பகுதிகளில் இவற்றின் மரபு நீடித்திருந்தது. கடல் கடந்த வாணிகம் இன்றும் குஜராத்தியர், தமிழர் கையிலேயே உள்ளது. பல பழங்கால மரபுகள் மார்வார், காசுமீரம், நேப்பாளம், அஸ்ஸாம், வங்கம், தென்னாடு ஆகிய புறப்பகுதிகளிலேயே தங்கு தடையற்று வளர்ந்துள்ளன.