54
அப்பாத்துரையம் - 12
பண்டை இலக்கிய மரபும் உடைய இந்திய வாழ்வில், இலக்கிய முடைய மொழிகளாகத் தொன்றுதொட்டு இன்றுவரை நமக்கு வந்தெட்டியுள்ள மொழிகள் இரண்டே. வடபால் வழங்கிய இலக்கிய மொழி, சமஸ்கிருதம் அல்லது வடமொழி; தென்பால் வழங்கிய மொழி, தமிழ் அல்லது தென்மொழி. மொழிகள் பிரிவுற்று வேறுபடுந்தோறும் அவற்றிற்குப் புதிய பெயர்களும் புதிய இலக்கிய வடிவங்களும் ஏற்பட்டன என்பது தெளிவு. வடவிந்தியாவின் பெரும்பாலான மொழிகள் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே இலக்கிய வடிவம் பெற்றன. மேற்குப் பாகிஸ்தான் மொழிகள் பல இன்னும் இலக்கிய வடிவம் பெறவில்லை.
சாதி முறைமை
சாதி முறைமையும் தொன்றுதொட்டு நிலவிய ஒன்று என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், நம் காலத்திலேயே சாதிகள் புதியனவாக ஏற்படுவதைக் காணலாம்.
சாதிகள் என்பன பிறப்பு மரபாக இறுகிவிடும் குலங்களும் வகுப்புகளுமேயாகும். குலங்கள் அல்லது திணை வகுப்புகள் தொன்றுதொட்டு எல்லா நாடுகளிலும் உள்ளவைகளே. ஆனால், வகுப்பு வேறுபாடு- அதாவது தொழில் வேறுபாடு- ஏற்பட்ட காலத்திலேயே அவை எங்கும் அழிவுற்றன. வகுப்புக்களும் எந்த நாட்டிலும் பிறப்பு மரபாகிச் சாதிகளாய்விடவில்லை.
இந்தியாவில் குலங்களும் வகுப்புகளும் சாதி முறையாக வளர்ந்ததற்கு இந்தியாவின் எந்த அடிப்படைப் பண்பு வேறுபாடும் காரணம் என்று கூற முடியாது. அத்தகைய அடிப்படைப் பண்பு இருப்பதாகக் கொள்வதும் தவறு. ஏனெனில், வரலாற்றில் பின்னோக்கிச் செல்லுந்தோறும் சாதி வேறுபாடுகளையோ, சாதி உயர்வு தாழ்வு முறையாகிய வருணாச்சிரம நெறியையோ, மிகுதியாகக் காண முடியாது.தவிர, இந்திய மண்ணிலேயே தோன்றிய பௌத்தர், சமணர் முதலிய பல சமய அறிஞர்களும் இம்முறையைக் கண்டித்தும், எதிர்த்தும், ஒழிக்கப் பாடுபட்டும் உள்ளார்கள். எனவே, இது காலக்கேட்டால் வளர்ந்த ஒரு முறையேயன்றி, இந்தியாவின் பண்டைப் பண்பை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த வளர்ச்சியன்று என்பதில் ஐயமில்லை.