இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
55
அதே சமயம் சாதி முறைமை எளிதில் ஒழிக்கப்படக் கூடியதாயிருந்தும், ஒழிக்கப்படாமல் வளர்ந்தே வருகிறது என்று கூற வேண்டும். இதற்குக் காரணம் என்ன என்பதை நாம் நீடித்து ஆராய வேண்டுவதில்லை. மேலே காட்டிய பண்டித ஜவஹர்லால் நேருவின் கூற்றிலேயே அதன் விடை அடங்கியுள்ளது. சமயம் சமய வணிகர் கையில் படுந்தோறும், அச்சமய குருமார் வகுப்பே சாதி முறையை அழியவிடாமல், சமயத்துடன் பிணைத்து வளர்த்துள்ளது. தொழில் வகுப்புகளில் தம் குருமார் வகுப்புக்கு உச்ச உயர்வு தேட அஃது உயர்வு தாழ்வுப் படி முறையையும் வகுத்துக்கொண்டது.
சமுதாய வாழ்வு
ஒரு நாட்டின் வாழ்வைச் சமய வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு, பண்பாட்டு வாழ்வு என நான்கு வாழ்வுக் கூறுகளாகவும், வாழ்வுப் படிகளாகவும் வகுக்கலாம். இவற்றுள் சமய வாழ்வே, மனித நாகரிக வாழ்வின் முதற்படியாகும். சமய வாழ்வுப் படி கடந்த பின் சமுதாய வாழ்வில் சமயம் ஒரு கூறாய் அடங்கிவிடும். சிந்துவெளியில் நாம் ஏற்கெனவே இப்படியைக் காண்கிறோம்.
மேலை நாடுகள் யாவும் இதே போல மக்கள் சமய வாழ்வுப் படி கடந்து, சமுதாய வாழ்வுப் படி, அரசியல் வாழ்வுப் படி, பண்பாட்டு வாழ்வுப் படி ஆகியவற்றை எட்டிப்பிடித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் சிறப்பாகவும், கீழ் நாடுகளில் பொதுவாகவும், வரலாற்றுக் காலத்தில் எல்லா வாழ்வுப் படிகளிலும் சமய வாழ்வே மேலோங்கி விஞ்சியிருப்பது காண்கிறோம். இது சிந்துவெளி நாகரிகத்துக்குப் பின் இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் ஏற்பட்ட ஒரு மாறுபாடு என்று கூறலாம்.
சமய வாழ்வுடன் பிணைக்கப்பட்டே சாதி முறை ஒரு நீண்ட காலப் பண்பாகியுள்ளது. அத்துடன் அது இயற்கையாக நலிவதற்கு மாறாக, மேன்மேலும் வளர்ச்சியடைந்து வருகிறது. சாதி வேறுபாடுகளும் அவை கடந்த சமய வேறுபாடுகளும் இன்றும், சமுதாய வாழ்வையும், அரசியல் வாழ்வையும் அடிமைப்படுத்தியே வருகின்றன. இந்தியா விடுதலை பெற்ற
ா