பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம் - 12

அன்றே இவ்வுண்மை நமக்கு வெளிப்படையாய்த் தெரிந்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல், சமுதாயம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை; இவை கடந்த சமய அடிப்படையிலேயே பிரிந்தன. மேலும், இந்தியாவிலுள்ள எல்லாப் பிரிவினைகளும் இன்று சமய அடிப்படையான பிரிவினைகளாகவே காட்சியளிக்கின்றன.

குறுகிய சமய வாழ்வாலும், சாதி முறை வேறுபாட்டாலும், அதனால் ஏற்படும் வகுப்பு உயர்வு தாழ்வு முறையாலும் சமுதாயம் இன்று ஒற்றுமை கெட்டுச் சீரழிகிறது.

அரசியல் வாழ்வு

சமய ஆதிக்கத்தால் சமுதாய வாழ்வு சீரழிவு பெற்றது போலவே, அரசியல் வாழ்வும் சமய வாழ்வு காரணமாகவும், பிற காரணங்களாலும் சீர் குலைந்துள்ளது. சாதி, சமயம், மொழி, பண்பாட்டு வேற்றுமை ஆகியவை இந்தியாவின் ஒரு சிறு பகுதியையும் ஒற்றுமைப்படுத்த முடியாதபோது, பரந்த மாநிலத்தை எவ்வாறு ஒற்றுமைப்படுத்த முடியும்? இந்தியாவில் அரசுகளும் பேரரசுகளும் எப்போதும் சீரழிவுற்று, அரசியல் வாழ்வு நீடித்த அமைதி பெற முடியாதிருந்து வந்திருக்கிறது. அங்ஙனம் முடிந்தபோதும், மக்கள் அவற்றின் கீழ் ஒன்றுபட முடியவில்லை. இந்தியாவில் நீடித்த அரச மரபுகள் இல்லாததன் காரணமும், மேற்கிலும் நடுவிலும் பேரரசுகள் எழ முடியாத காரணமும் இதுவே. பேரளவில் நீடித்த பேரரசு மரபுகள் கிழக்கிலும் தெற்கிலும் தொடங்கின என்பதும் கவனிக்கத்தக்கது.

தவிர, குடியாட்சிப் பண்புகள் சிந்துவெளியில் பேரளவில் இருந்தன என்பதைக் காண்கிறோம். தென்னிந்தியாவிலும் வடவிந்தியாவிலும் பல குடியரசுகள் நிலவியிருந்தன. ஆனால், சமய குருமார் ஆதிக்கம் எப்போதும் குடியாட்சிப் பண்புக்கும் மக்கள் சரிசம உரிமைக்கும் மாறாகவே செயலாற்ற முடியும். சிற்றூர்ப் பஞ்சாயத்து நீங்கலாக, அணிமைக்காலங்களில் பண்டைக் குடியாட்சி மரபுகள் பெரும்பாலும் அழிந்து போனதற்கு இதுவே காரணம் என்னலாம்.

பேரரசுகளின் வாழ்வைத் தடுத்துக் குடியாட்சிப் பண்புகளையும் நலிவித்த இவ்விடைக்கால நாகரிகம், ஒரு நாடு,