58
அப்பாத்துரையம் - 12
யினராகக் கருதப்பட்டார்கள். சமுதாயத்தில் அவர்களுக்கு அரசியல் மதிப்பு இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டது.
அரசியலில் சமய குருமார் ஆதிக்கம்
இங்ஙனம் இந்தியாவின் ஒற்றுமை தவறிக் கெட்டதற்கான பண்புக் கோளாறுகள் பலவும் இந்தியாவின் அடிப்படைப் பண்புகளுமல்ல; தொன்றுதொட்டு நிலவிய பண்புகளுமல்ல என்று காண்கிறோம். அதே சமயம் அவை இன்று கிட்டத்தட்ட அடிப்படைப் பண்புகள், அதாவது நீடித்த பண்புகளாய் விட்டன. என்பதில் ஐயமில்லை. சமய வகுப்பான பிறப்பு வகுப்பு மோகஞ்சதரோவிலேயே தொடங்கியிருக்கலாமென்று எண்ண இடமுண்டு. ஆயினும், அவ்வகுப்பு அன்று சமயத்துறை ஒன்றிலேயே ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டும். அயலினத்தார் படையெடுத்த பின் பழைய வீர வகுப்பினர், ஆட்சி வகுப்பினர் ஆகியவர்களிடையே பிளவுகள் ஏற்பட்டும், அவர்கள் செல்வாக்குக் குறைந்தும் போன போது, சமய வகுப்பு அயலாட்சிகளுடனும், அவர்கள் சமயப்பண்புகளுடனும், மொழிகளுடனும் இணக்கமுற்றுத் தழுவி, அவ்வயல் அரசியலில் ஆதிக்கம் பெற்றது. அரசியல் ஆதிக்கத்தை ஒட்டிச் சமுதாய ஆதிக்கமும் நாளடைவில் தொடர்வது இயல்வு. நிலைமை இதுவே என்பதை நாம் இன்றும் காணலாம். சமய வகுப்பினர் வகுத்த வருணாச்சிரம முறை இன்னும் ஏட்டளவிலே இருந்தாலும் சட்டத்திலும் இடம்பெற்றுவிட்டது. ஆனால், அது இன்னும் மக்கள் வாழ்வில் முழுதும் செயலாற்ற முடியவில்லை. இது பிற்கால சமய வகுப்பாளர் அரசியல் தொடர்பை நன்கு புலப்படுத்துகிறது.
இந்தியாவின் அரசுகள், பேரரசுகள், வீழ்ச்சியில் நாம் அடிக்கடி சமய குருமாரின் கைத்திறங்களைக் காண்கிறோம். அத்துடன் அரசுரிமை மாறுதலுடன் அடிக்கடி சமயம் மாறுவதையும், சமய வகுப்பின் உரிமைப்படி மாறுவதையும் காண்கிறோம். சிசுநாதர் காலத்தில் மன்னர் புத்த சமயத்தைத் தழுவினர். அதன் பின் நந்தரும் அவ்வழி நின்றனர். நந்தர் வீழ்ச்சிக்குச் சாணக்கியன் என்ற சமயத்துறை அறிஞனே காரணம் என்று மரபுரை கூறுகிறது. மௌரியரும் அசோகர் காலத்தில் புத்த சமயத்தைத் தழுவினர். அதற்குப் பின்னும் சமய