இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
அயலாட்சியின் இருதிறப் பண்பு
63
ஒற்றுமையின்மை, ஒற்றுமைக்குக் கருவிகளான பொது அரசியல் தொடர்பு மொழித் தொடர்பு பண்பாட்டுத் தொடர்பு ஆகியவை இல்லாமை, குறிக்கோளில்லாமை, சமுதாயச் சீரழிவு, சமய வகுப்பின் ஆதிக்கம் ஆகிய இவை, அயலாட்சிக்கு முன்பே இருந்த நம் அடிப்படை அடிமைப் பண்புகள். அயலாட்சியின் போது இவை ஓரளவு வளர்ந்திருக்கலாம். ஆனால், இவை குறையத் தொடங்கிவிட்டன.எனினும், ஒரு புது அடிமைப் பண்பு அயலாட்சியில் ஏற்பட்டுள்ளது. அவ்வயலாட்சிக் காலத்திலேயே உலகில் இயந்திரப்புரட்சி ஏற்பட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டன், இந்தியாவின் செல்வம், தொழில் திறன், வாணிகக்களம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உலக வாணிகப் பேரரசு ஆயிற்று. பிரிட்டனால் ஆளப்பட்ட இந்தியா,தன் தொழில் மரபும் வாணிக மரபும் இழந்து, அயலார் தொழிற்களம், அயலார் வாணிகக் களம் ஆயிற்று. அத்துடன் கடல் வாணிக உரிமை, கடற்படை நிலப்படை உரிமை, ஆயுத உரிமை ஆகியவற்றையும் இந்தியா இழந்தது. மக்களிடையே வீரம் குறைந்தது. வீரமரபினரின் வாழ்க்கைப்படி தாழ்ந்தது. அடிமை மனப்பான்மையுடையவர், அயலார் பண்பாட்டை ஆதரிப்பவர், அயல் மொழி பயின்றவர்படி உயர்ந்தது. இப்புதிய அடிமைப் பண்புகள் அயலாட்சி தந்த புது விளைவுகள்.
அதே சமயம், அயலாட்சி, நாகரிக உலகுடன் இந்தியாவை மீண்டும் இணைத்தது. அழிந்துவிட்ட பண்டைய சால்டிய, எகிப்திய, கிரேக்க, உரோம மரபுகளின் கால்வழி மரபான மேனாட்டு நாகரிகத் தொடர்பு, அதன் பழம்பண்புகளை அதற்கு நினைவூட்டிற்று. அதன் துயில் ஒழிந்தது.
அயலாட்சியிலேயே, அயலாட்சியின் தூண்டுதலாலேயே ஏற்பட்ட இந்தியாவின் விடுதலைப் பேரியக்கமாகிய பேராற்றின் தோற்ற வளர்ச்சி விளைவுகளை இனி ஆராய்வோம்.