இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
65
இந்தியாவின் அடிப்படைப் பண்புகளுக்கு ஒரு சேமக் கலமாகவும் சேமப் பண்ணையாகவும் இயங்குகின்றது. இச்சேம வளத்தை அது அவ்வப்போது மாநிலத்துக்குப் புது வளமாக வழங்கி யுள்ளது. பத்தி இயக்கங்களும் தாய்மொழி இயக்கங்களும், இத்தகைய வளங்களிற் சில.
இந்தியாவின் விடுதலைப் போரியக்கத்திலும் தமிழகம் பெரும்பங்கு கொண்டுள்ளது. விடுதலைக் கொடியை முதன் முதலில் உயர்த்தி விடுதலை முரசமார்த்த பெருமையும் அதனுடையதே. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு படியிலும் அது இப்பெருமையைப் பேணிக் காத்திருக்கிறது. தன் தனிக்குரலை அவ்வப்போது எழுப்பி, அது மாநில இயக்கத்துக்குத் தூண்டுதலும் ஊக்கமும் அளித்துள்ளது.
ஆதிக்கவாதிகளின் இருட்டடிப்பு
மாநில விடுதலை வரலாற்றைச் சிலர் காங்கிரஸ் வரலாற்றுடன் தொடங்குவதுண்டு. இஃது அயலாட்சியாளர் சார்பாக எழுதப்பட்ட வரலாற்றின் ஒரு விளைவு. காங்கிரஸ் பேரவை தோற்றுவிக்கப்பட்டது 1885லேதான். அது அப்போது ஒரு மிதவாத இயக்கமாகவே இருந்தது. ஆட்சியாளரும் பல வெள்ளையரும் அதை ஆதரித்திருந்தனர். இதற்குக் காரணம் உண்டு: நாட்டில் அன்று மக்களிடையே மனக்குமுறலும் கொந்தளிப்பும் மிகுதியாய் இருந்தன. புரட்சிக்கனல்கள் ஆங்காங்கே வீசிக் கொண்டிருந்தன. மக்களின் இப்புரட்சியார் வத்தைப் படித்த வகுப்பினர், பெருமக்களின் மிதவாத அரசியல் இயக்கமாக மாற்றும் எண்ணத்துடனேயே, ஆட்சியாளர் மிதவாதிகளைத் தூண்டிக் காங்கிரஸ் பேரவை அமைக்கச் செய்தனர்.
பேரவையின் பிறப்புக்கு உடனடிக் காரணமாயிருந்த இந்தப்புரட்சி மனப்பான்மைக்கு மூல காரணம் 1857ல் நடைபெற்ற வடவிந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டமே. அது படைப்பலத்தாலும் ஆயுதப்பலத்தாலும் பெருமுயற்சியின் பயனாக ஒடுக்கப்பட்டது. ஆயினும், மக்கள் ஆர்வம் ஆயுதப் பலத்தால் ஒடுக்கப்படத் தக்கதன்று. அது புரட்சிக் கனலாய்க் கனன்றெரிந்தது.