பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 12

ஆட்சியாளர் வடவிந்திய முதற்போராட்டத்தைப் படைவீரர் கிளர்ச்சியே என்று கூறி இருட்டடிக்கப் பார்த்தனர். தேசீயவாதிகள் மாநில வரலாற்றின் படிப்பினைகளை எடுத்துரைத்து விளக்கிய பின்பே அதன் தனிச் சிறப்பு வெளிப்பட்டது. இந்தியாவின் இறுதி விடுதலைப் போரின் தளபதியான தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் அப்போராட்டத்தை இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் என்று கூறிச் சிறப்பித்தார்.

ஆனால், இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம், 1857ல் நடைபெற்ற வடவிந்தியாவின் முதல் போராட்டமன்று; 1798ல் நடைபெற்ற பாஞ்சாலக்குறிச்சிப் போராட்டமே. அஃது உண்மையில் வடவிந்தியப் பெரும்புயலுக்கே மூல காரணம் என்று கூறத்தக்கது.

1857க்கு முன்னுள்ள சூழ்நிலை

வடவிந்தியப் போராட்டத்தின் வரலாற்றை 'எரிமலை' என்ற பெயருடன் வீரசவர்க்கார் எழுதியுள்ளார். அதில் அவர் அதன் காரணங்களான சூழ்நிலைகளையும் மூல காரணங் களையும் விளக்கியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியாளர் அப்போது நாட்டுப் படை வீரர்மீதும் நாட்டு மன்னர்மீதும் அவநம்பிக்கை கொண்டு அவர்களைச் சூழ்ச்சியால் பிரித்து வைத்தும், அடக்கு முறைகளால் ஒடுக்கியும் வந்தனர். இந்நிலைக்கு அவ்விருசாரா ரிடையேயும் நிலவிய குமுறல்களும் எதிர்ப்புக்களுமே காரணமாகும்.

1857 புரட்சியை ஆட்சியாளர் படை வீரர் கிளர்ச்சி என்றனர். ஆனால், அது படை வீரர் கிளர்ச்சியானால், முதற் படைவீரர் கிளர்ச்சியன்று. அதற்கு முன்பே பல படைவீரர் கிளர்ச்சிகள் நடைபெற்றிருந்தன. அதுபோல, நாட்டு மன்னரிடையேயும் பல நாட்டு மன்னர் அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்துத் தாக்குவதில் ஈடுபட்டிருந்தனர்.

படைவீரர் கிளர்ச்சிகளில் முந்தியதும் முதன்மை வாய்ந்ததும் 1806இல் வேலூரில் நடைபெற்ற படைவீரர் கிளர்ச்சியே. அது கிட்டத்தட்ட ஒரு பெரும்புரட்சியளவில் பரந்திருந்தது. அதை ஒடுக்க ஆட்சியாளர் அரும்பாடுபட்டனர்.

>