68
அப்பாத்துரையம் - 12
திப்பு, ஹைதரின் செயலெல்லையைத் தாண்டிப் போரை நடத்தினான். பிரிட்டிஷார் அப்போதுதான் ஓர் உலக வல்லரசாகிக் கொண்டிருந்தனர். அவர்கள் தாயகத்திலேயே அவ்வல்லரசை எதிர்த்த வீர வல்லரசன் பிரெஞ்சு வெற்றி வீரனான நெப்போலியன். திப்பு அவனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தன் போரை மாநில எல்லை கடந்து உலக எல்லைக்குக் கொண்டு சென்றான். இறுதியில் அவனுக்கு ஏற்பட்ட தோல்வியும் மைசூர் எல்லையிலுள்ள ஒரு தோல்வியன்று. அது மாநில எல்லையில் நின்று, உலக வல்லரசுப் போட்டி யெல்லையில் ஏற்பட்ட ஒரு தோல்வியே.
மைசூர் மன்னனின் போர், நாட்டு மன்னர்களின் ஆதிக்கப் போர்களுள் ஒன்றன்று என்பதை அதன் முடிவு காட்டுகின்றது. பிரிட்டிஷார் திப்புவின் மரபு மீது வஞ்சம் தீர்த்தனர். அதை வழக்கம்போல மீண்டும் ஆளவிடவில்லை. அதே சமயம் மைசூரை அவர்கள் நேரடியாக ஆள விரும்பவுமில்லை; அதன் பேரரசெல்லையைக் குறுக்கி, பழய மன்னர் மரபுகளில் ஒன்றையே புதிய அடிமை மரபாக்கினர்.
1798- தமிழகத்தில் புரட்சி
1857-ஆம் ஆண்டு புரட்சியைப் போல, 1798-ஆம் ஆண்டுப் புரட்சி இந்தியாவின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகிப்பதாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு இராபர்ட்டுக் கிளைவ் கால்கோள் செய்ததாகக் கூறப்படும் ஆண்டுகள், 1748-ஆம் ஆண்டும் 1757-ஆம் ஆண்டுமே. முன்னது வந்தவாசிப் போரையும், பின்னது பிளாசிப் போரையும் குறிக்கின்றன. அதன் பின் அதன் அடித்தளத்தை ஆட்டிக் குலுக்கிய நிகழ்ச்சிகள் 1798-ஆம் ஆண்டுப் புரட்சியும் 1857-ஆம் ஆண்டுப் புரட்சியுமேயாகும். தென்னிந்திய வரலாற்றில் 1798 மைசூர்ப் போர்களில் நடு ஆண்டாய் விளங்குகிறது. அதே சமயம், பாஞ்சாலங்குறிச்சிப் போரிலும் அதுவே தலைமை ஆண்டாய் நிலவிற்று.
இக்கால இந்தியாவின் முதற் புரட்சியான பாஞ்சாலங் குறிச்சி எழுச்சி நடைபெற்ற இவ்வாண்டே உலகின் முதற்பெரும் புரட்சியாகிய பிரெஞ்சுப் புரட்சியின் உச்ச நிகழ்ச்சி ஆண்டாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னது,