84
அப்பாத்துரையம் – 13
விசயநகர பகமனிப் பேரரசுகளுக்குக்கிடையிலும் இதுவே எல்லைப் பூசல்களை விளைவித்து அடிக்கடி கைமாறி வந்ததென்பது குறிப்பிடத் தக்கது. மைசூர்ப் பேரரசர்கூட வடதிசை அரசு பேரரசுகளுடன் இந்தப் பகுதியிலேயே அடிக்கடி போராட வேண்டியிருந்தது. தென்னகத்தின் இயல்பான தேசீய மரபின் வலிமைமிக்க எல்லைக் கோட்டு வரையறைகளை இது நன்கு விளக்குகிறது.
புயலலையின் திவலைகள்
இன்று இரேய்ச்சூர் என்று வழங்கும் சொல்கூட, இடைதுறை என்ற பழய தமிழ்ச்சொல்லின் தெலுங்கு மொழித் திரிபேயாகும். இச்சொல்லும் வாரங்கல் என்று திரிந்துள்ள ஓரங்கல் என்ற பழந் தமிழ்ச் சொல்லும் மூன்றாக, ஐந்தாகப் படிப்படியாகப் பிரிவுற்றுத் திரிந்த முன்னை முத்தமிழ்ப் பரப்புக்கும் மரபுத் தொடர்புக்கும் சான்றுகள் ஆகும்.
இரேய்ச்சூர் வெற்றியையடுத்து அலாவுதீன் மேல்திசை நோக்கிப் பரவி, 1354-இல் கோவா, தபோல் முதலிய மேல் கரைத் துறைமுகங்களையும் பின் கீழ்திசை திரும்பிப் போங்கிர்த் துறை முகத்தையும் வென்று கைக்கொண்டான். இவ்வாறு அவன் ஆட்சியிறுதிக்குள் மேல்கடற்கரையில் போவா முதல் தபோல் வரையுள்ள பகுதி முழுதும் அளாவிக் கிழக்கே போங்கிர் வரையும் வடக்கிலும் கிழக்கிலும் பெரு கங்கா, கிருஷ்ணா ஆறுகள் வரையுள்ள பகுதியும் பகமனிப் பேரரசின் பரப்பாயின.
தொடக்கக்கால விசயநகரப் பேரரசர் மேல் கடற்கரைத் துறைமுகங்களின் முக்கியத்துவத்தைப் படிப்படியாகவே உணரத் தொடங்கினர். தென்னகத்தில் வல்லரசராக விளங்குவதற்கு எப்போதும் அராபியாவிலிருந்து இறக்குமதியாகும் புதுப் புதுக் குதிரைகள் மூலம் குதிரைப்படைகளை வலுப்படுத்திக் கொண்டி ருத்தல் அந்நாளில் இன்றியமையாததாயிருந்தது. இது மிக மிகப் பழமை வாய்ந்த மரபு என்பதைப் புரவிகளின் சங்க இலக்கிய வருணனைகளும், மாணிக்கவாசகர் வரலாறும், பிற்காலப் பாண்டியர் சூழல்களும் நமக்கு நினைவூட்டுகின்றன. இது தவிர வெற்றித் திருநகர் உலக வாணிக நகரமாகவே வளர்ச்சி யடைந்ததால், மேல் கடற்கரைத் துறைமுகங்களின் தொடர்பு அதன் உயிர் மூச்சா யிருந்தது. பின்னாளைய விசயநகரப் பேரரசர்