வெற்றித் திருநகர்
123
வழங்கினான்.குல்பர் காவும் பீஜப்பூரும் அயல் கட்சித்தலைவன் யூசுப் அலி ஆதில்கானிடமும், தௌலதாபாத் கவானிடமும் இருந்தன. இவ்விருவரும் அயல் கட்சியினர். தெலிங்காணம் மாலிக் ஹாசனிடமும் பேரார் பத்துல்லா இமதுல் முல்க்கிடமும் விடப்பட்டன. மாலிக் ஹாசனுக்கும் கவானுக்கும் வேற்றுமை ஏற்பட்டபோது, தெலுங்காண நாடு வாரங்கல் இராசமகேந்திர வரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
மூன்றாம் முகமது தன் ஆட்சியிறுதியில் தன் முழு வலுவையும் திரட்டிக் கொண்டு கபிலேசுவரனைப் போலத் தென்திசையில் வீர உலா ஆற்ற விரும்பினான். தெலுங்காணத்தில் மாலிக்ஹாசனிடமாகத் தன் புதல்வன் அகமதை அமர்வித்து விட்டு முகமது கவானையும் மாலிக் ஹாசனையும் படை யெடுப்பின் மூலதளமாகிய கொண்டபள்ளியில் நிறுவினான். சாளுவ நரசிம்மனின் மாகாண முழுவதிலும் அவன் சுழன்று, சூறையாடிக் காஞ்சியை நோக்கி முன்னேறி அங்கும் பெரும்பொருள் கொள்ளையடித்தான். திரும்பும் வழியில் அவனால் மசூலிப்பட்டணத்தையும் பிடிக்க முடிந்தது. ஆனால் எதிரியை உள்ளேறவிட்டு வேண்டுமென்றே பின்னேறி வந்த நரசிம்மன் அவன் வீரஉலா முடிந்து மீளும் சமயம் அவனை வளைத்தான். அவன் படைகளைச் சின்னாபின்னப்படுத்தி அவன் கொள்ளையடித்துக் கொண்டுவந்த செல்வம் முழுவதையும் கைக் கொண்டான்.
மூன்றாம் முகமதுவின் ஆட்சியிறுதியில் பகமனிப் பேரரசு சரிவுற்றுத் துண்டு துண்டாகப் போகத் தொடங்கிற்று. முகமது கவானுக்கும் மாலிக்ஹசனுக்கும் விளைந்த பூசலில், ஹசன்கவானைக் கொல்லச் சதிசெய்து தோல்வியடைந்தான்.1481- இல் அவன் இது காரணமாகத் தூக்கிடப்பட்டான். அடுத்த ஆண்டே மூன்றாம் முகமது மறைவுற்று அவன் புதல்வன் மாமூது (1482-1518) அரசனானான். அவன் தவிசேறி நான்காண்டுகளுக்குள் தெலுங்காணம் கிளர்ச்சி செய்து விடுதலை பெற்றுவிட்டது. மேல்திசைத் துறைமுகப் பகுதிகளிலுள்ள கிளர்ச்சிக்கு யூசுப் ஆதில்கான் ஆதரவு தந்து ஆதில்ஷா என்ற தனிப்பட்டத்துடன் பீஜப்பூர் அரசை நிறுவினான். விரைவில் அகமதுநகர், பீரார், கோல்கொண்டா, பீடார் ஆகிய மாகாணங்களும் தனியரசுகளாகப் பிரிவுறத் தொடங்கின.