பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

அப்பாத்துரையம் – 13

வீரநண்பன், தலைவன், அண்ணல் மறைவின் சோகத்துக்குக் கூட இடமின்றி அந்நண்பன் ஆணை நரசனை வாழ்க்கைப் பணிக்கு உடனே உந்தி அனுப்பிற்று. 'இரேய்ச்சூர் உதயகிரி, இரேய்ச்சூர் உதயகிரி' என்ற பல்லவி வடிவில் அது அவன் புறக்காதுகளில் ஒலித்து, அக்காதுகளையும் நிறைத்து, அவனை அவ்வாழ்க்கைப் பணியில் சுழற்றித் தள்ளிற்று.

நரச நாயகனின் அரச நாயகம்

அண்ணல் சாளுவ நரசிம்மனின் ஆணைகள் இரண்டில் நரசநாயகனால் உடனடியாக எளிதாகவும் முழு அளவிலும் செய்து முடிக்கக் கூடியது அவன் அடங்கிய குரலில் கூறிய இரண்டாம் கோரிக்கையே. அதைப் பின்பற்றி நரசநாயகன் சாளுவ நரசிம்மனின் மூத்த புதல்வன் திம்ம பூபாலனைத் தவிசேற்றினான்.ஆனால் நரச நாயகனின் எதிரியான திம்மரசன் என்பவன் தூண்டுதலால் அவன் கொலை செய்யப்படவே, சிறுவனாயிருந்த அடுத்த இளவலான இம்மடி நரசிம்மனையே அடுத்த பேரரசனாக்கினான்.இம்மடி நரசிம்மனின் ஆட்சி (1491-1505) ஈரேழாண்டுகள் நடைபெற்றது. ஆனால் அதன் முதல் ஈராறாண்டுகள் அவன் பெயரால் நரசநாயகன் நடத்திய அரசநாயகமாகவே (1491-1503) அமைந்தது.

'இரேய்ச்சூர் - உதயகிரி, உதயகிரி - இரேய்ச்சூர்' என்ற அண்ணல் ஆணை மொழிகளே நரசநாயகன் உள்ளத்தில் ஓயாது சுழன்றாடின. அவன் உள்ளத்தின் ஒவ்வோர் அணுவும் 'அந்தோ! அண்ணல் சொற்கள் பொய்த்துவிடக் கூடாதே!' என்று துடித்தன. ‘ஆனால் எப்போது, எப்படி, எம்முறையில் இறக்குமுன் அப் பணியை முடிவுறக் காண வழிதேடுவேன்!' என்று அவன் ஓயாது அதற்கான திட்டங்களைத் தன் மனக்கோட்டையாக எழுப்பிக்கொண்டேயிருந்தான். அச் சமயம் பேய்ச்சூராக ஆடிய அண்ணல் குரல் தானோ என்னும்படி "இரேய்ச்சூர் - உதயகிரிக்கு வழி இதோ!” என்ற ஒரு புறக்குரல் அவன் கேட்க எழுந்தது.

பகமனிப் பேரரசின் மைய ஆட்சியில் முதலமைச்சனா யிருந்த காசீம் பரீதின் குரலே அது! "இரேய்ச்சூர் வட்டத்தை இதோ நீ எடுத்துக்கொள். அதற்கு வழி கூறுகிறேன்" என்று அது அவனை நோக்கி முழங்கிற்று.