வெற்றித் திருநகர்
(163
ஆட்சியிலேயே அத்தென்னகப் பேரரசின் தமிழ் தேசீயக் கொழுந்தாக, பழயத் தமிழ்த் தேசீயத்தின் பிள்ளையின் பிள்ளையாக, மதுரையிலும் பிற இடங்களிலும் புதிய தமிழக, தென்னகத் தேசீயங்கள் எழத் தொடங்கின. மதுரை, தஞ்சை, செஞ்சி முதலிய பல இடங்களிலும் நிறுவப்பட்ட இத்தேசீயக் கொழுந்துகளில், மதுரையே மூத்த கொழுந்தாகவும் முதன்மையான கொழுந்தாகவும், அடுத்த தென்னகப் பேரரசரான ஹைதர் - திப்பு ஆட்சி காலம்வரை நீடித்த கொழுந்தாகவும் நிலவிற்று.
கிருட்டிண தேவராயன் ஆட்சியில் பேரரசு தமிழக அரசியலில் தலையிடுவதற்குரிய உடனடிக் காரணம் இது என்று வரையறுத்துக் கூற முடியவில்லை. ஆனால் கலிங்க இளவரசியின் திருமணத்திற்கும் ஆதில்ஷா நாட்டுப் படையெடுப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் பேரரசன் கிருட்டிண தேவராயன் கீழ்க்கரையிலுள்ள கத்துவிர் (Catuvir) என்ற அரசனை ஒரு தீவில் நடந்த போரில் வென்று அவன் நாடு கைக்கொண்டதாகவும், ஐம்பதாண்டுகள் திறைதர மறுத்த அந்த அரசனைப் பணிய வைத்ததாகவும் குறிக்கிறார். அத்தீவு உண்மையில் தண்பொருநை யாற்றின் கழிமுகத்திலுள்ள காயல்பட்டினமேயென்றும், இரண்டாம் தேவராயன் காலத்தில் இத்தீவு வரை ஆட்சிசெய்த கொல்லம் அரசனிடம் விசயநகரம் திறைபெற்றதன் பின் அப்பரப்பின் கீழ்த்திசைப் பகுதியைத் திருவாங்கூர் அரசனும், காயல் உள்ளடக்கிய மேல் திசைப் பகுதியைக் கயத்தாற்றில் ஆண்டபாண்டிய மரபினரும் கைப்பற்றினரென்றும், ‘கத்துவிர்’ என்று நூனிஸ் கூறுவது இக் கயத்தாற்றரசனையே என்றும் வரலாற்றுப் பேராசிரியர் வெங்கடரமணய்யா கருதுகிறார். ஏறத்தாழ கி. பி. 1519-இல் கயத்தாறு கிருட்டிண தேவராயன் கைப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட இதே சமயத்திலேயே தமிழகமெங்கும் பல தலைவர்கள் கிளர்ச்சி செய்ததாக வேறு ஆதாரங்கள் கூறுகின்றன. கயத்தாறு நிகழ்ச்சி இவற்றின் இறுதிக் கட்டமாகவே இருத்தல் கூடும். ஏனெனில் பேரரசன் அவற்றில் நேரடியாக ஈடுபடவில்லை. கிளர்ச்சிகளும் பெரிதும் தென்கோடியிலன்றித் தமிழகத்தின் வடபகுதியில் செஞ்சியை மையமாகக் கொண்டிருந்தன.