6. வண்ண மா மயில்
மீனாடுவேலைச் சுறவென்னவீரச் செருவுடற்றிக் கோனாடுவெங்களங் கோலாகலங்கண்ட கோமன்னர்கோ வானாடுவில்லின் வளர்மாமுகில்கண் டுளங்களிப்பத் தானாடுவண்ணத் தகைமாமயில்நடம் வாழியரோ?
எண்ணப் புயலிடையே எழில்தேசீயச் சீரொளியால் வண்ணத் தனிமுகில் வில்லினைநாடிய போழ்தினிலே கண்ணிற் கருமணி தாவிஒண்மின்னற் கொடியணைய மண்ணிற் படுமயில் மால்நடங்காண்புலம் வாழியரோ!
நெய்யும் திரியும் பற்றுக்கோடாகக் கொண்டு எரியும் சுடர் அப்பற்றுக்கோடு அகன்று இயற்கையளாவும் சமயம் அழகுற நின்றாடி அடங்குவது இயல்பு.அன்னப்புள் தன் வாழ்வின் இறுதி அணுகும் சமயம் இயற்கையில் எங்கும் கேட்க முடியாத இனிய ஏங்கிசைமிழற்றி இயற்கையோடு ஒன்றுபடும் என்று கிரேக்கப் பழங்கதைகள் விதந்துரைக் கின்றன. விசயநகர வாழ்வு தென்னக வாழ்வினுள் எழுந்து குமுறிய பெரும்புயலை அணைத்துத் தன் புகழ்ப் பெருமைகளில் பெரும் பகுதியை அதன் மின்னொளியில் கலக்கவிட்ட சமயம், அதன் இறுதி எழிலொளியாக, அந்திவான் வண்ணமாக, அழகு நடனமாக அமைகிறது. இராமராயன் வீறு சான்ற வாழ்க்கைப் போராட்டம்.
கிருட்டிண தேவராயனைப் போலவே அவன் தோலா வெற்றி வீரனாக விளங்கினான். அது மட்டுமன்று, கிருட்டிண தேவராயன் வாழ்வில் முதுமை தலையிட்டிருந்தது. ஆனால் இராமராயன் வாழ்விலோ முதுமை தட்டவில்லை. உடன் முதுமையுடனே அவன் வெற்றிப் புகழ் இளமை வீறுடன் இளமை முறுக்கறாமல் இறுதிவரை மேன்மேலும் வளர்ந்து