பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

"வெற்றித்திருநகர்" என்ற இந்நூலினை ஆக்கித் தமிழகத்திற்குப் படைத்துள்ள திரு. கா. அப்பாத்துரையாரைப் போற்றுகின்றேன். விசயநகர ஆட்சியின் சமூக, அரசியல், பொருளாதாரச் செய்திகளைத் தொடர்புபடுத்தி இனிய வகையில் கட்டுரை போன்றும், புதினம் போன்றும் அமைந்துள்ள வ்வரலாற்று நூல் தமிழக மக்கள் யாவராலும் படித்துப் பயன் பெறத்தக்கது என்பது தெளிவு. இது ஒரு வரலாற்று நூல் ஆயினும், வற்றலாய் அமையாமல் இனிக்குஞ் சாறுபோல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியரும் சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவருமாகிய என் நண்பர் திரு. கா. அப்பாத்துரை அவர்களுடைய பாவன்மை நூலகத்தே ஆங்காங்கே வெளிப்பட்டுள்ளது. அத்தியாயந்தோறும் ஒரு கவிதையோடு இந்நூல் தொடங்குகிறது. அன்றியும், இடை யிடையே அமைக்கப்பட்டுள்ள பாக்கள் பலவற்றால் இந்நூல் அணிபெற்றுள்ளது.

நல்ல

பொதுவாக, வரலாற்று நூல்களை இலக்கியம் என மதிப்ப தில்லை என்றாலும், இந்நூல் அக்கருத்துக்குப் புறம்பாய் நடை பெற்றுள்ளதென்பதைப் படித்துப் பார்ப்போர் கட்டாயம் அறிவர். நல்ல இனிய நடையில் அமைந்துள்ள இவ்வரலாற்று நூல் தமிழ் இலக்கியமாகவும் மதித்துப் பாராட்டும் தகைமைத்து. இதன்கண் விசயநகரத்து நாயக்கர்களோடு தொடர்பு பூண்ட ஏனைய மன்னர்களைப் பற்றியும், சிற்றரசர்களைப் பற்றியும் ஆன செய்திகள் பலவற்றை அறிந்து கொள்வதற்கு இந்நூல் தக்க கருவியாக உள்ளது. பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை அமைந்த தமிழ் நாட்டு வரலாற்றினைக் கோவைப்படுத்தி எடுத்துக்காட்டும் இனியபனுவலாய் அமைந்த இதனை நான் வரவேற்கிறேன்.

சென்னை - 5

24-6-60

(ஒம்.) அ. சிதம்பரநாதன்