பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

அப்பாத்துரையம் - 13

மதுரையில் திருமலை நாயகனுக்குப் பின் இரண்டாம் முத்துவீரப்ப நாயகன் ஓராண்டும் சொக்கநாத நாயகன் (1659–1682) இருபத்துமூன்று ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். முத்துவீரப்பன் நாட்களில் பீசப்பூர்ப் படைகள் தஞ்சையையும் மதுரையரசின் வடபகுதியையும் சூறையாடின. அடுத்த ஆட்சியில் பீசப்பூர்ப் படைத்தலைவனான வானாமியான் திருச்சிராப்பள்ளிவரை படை நடத்தி இரு அரசுகளுக்கும் தொல்லை கொடுத்தாலும் திருச்சிராப்பள்ளியை அணுக முடியவில்லை. கொள்ளை யச்சுறுத்தலால் சொக்கநாதனிடமிருந்து பணம் மட்டும் பெற்று மீண்டான்.

சொக்கநாதன் தன் பேரவாவால் மைசூரில் புது நிலம் பெற எண்ணி அதன்மீது 1667-இல் படையெடுத்தான். ஆனால் இச்செயல் மூலம் அவன் தன் நிலம்தான் இழக்க நேரிட்டது. மதுரையரசின் பகுதிகளான சேலம், கோயம்புத்தூர் ஆகியவை மைசூர் வசமாயின. மைசூர் மதுரையரசையும் மற்ற நாயக அரசர்களையும் தாண்டி வலிமையுடையதாக வளரத் தொடங்கிற்று.பீசப்பூரே அவ்வளர்ச்சி கண்டு பொறாமையுற்று மற்ற நாயக அரசுகளையெல்லாம் திரட்டி மைசூரை எதிர்க்க முற்பட்டது. அத்துடன், விசயநகரப் பேரரசுக்கு இன்னும் மக்களிடையே நிலவிவந்த தேசீய மதிப்பார்வத்தைப் பயன்படுத்திச் சமய வேறுபாடற்ற தேசீயப் பேரரசுப் போராட்ட மாக அதை ஆக்கவும் பீசப்பூர்த் தலைவர் முயன்றனர். ஏனெனில் இந்த முஸ்லிம் -நாயக அரசுக் கூட்டணி பேரரசன் சீரங்கனின் அரசுரிமைப் பெயரால், அவனையே பெயரளவில் தலைவனாகக் காண்டு அமைக்கப் பட்டது. மதுரைநாயகன் சொக்கநாதன், இக்கேரிநாயகன், பீசப்பூர்ப் படைத்தலைவன் அனந்தோஜி ஆகிய அனைவரும் பேரரசன் கொடிக்கீழ் நின்று 1672-இல் மைசூர் அரசன் சிக்கதேவராயனை எதிர்த்துப் போரிட்டனர். ஆனால் இத்தனை கூட்டுறவும் பயனற்றுப் போயிற்று; போரில் சிக்கதேவராயனே வெற்றி பெற்றான்.

சொக்கநாதனை மைசூர் அரசன் வென்றதாகக் குறிக்கும் கன்னடக் கல்வெட்டுக்கள் சொக்கநாதனைப் பாண்டியன் என்றே சிறப்பிக்கின்றன. பண்டைத் தமிழகத் தேசீயமரபு விசயநகர கால இறுதி கடந்தும் எவ்வாறு விசயநகரத்துடனும் மதுரை நாயக அரசுடனும் விரவிற்று என்பதை இது காட்டுகிறது.