பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

263

'மராத்தியர் ஓர் இனமாக மலர்ச்சியுறுவதற்குரிய காரணங்களுள் விசயநகர (இந்து)ப் பேரரசின் வீழ்ச்சி முக்கியமான ஒன்று' என்று வலியுறுத்துகிறார் டாக்டர் எஸ். கிருட்டிணசாமி ஐயங்கார் என்ற வரலாற்றுப் பேராசிரியர்.

விசயநகரத்தையும் மராத்திய இனமலர்ச்சியையும் இணைக்கும் ஒரு தனி இடை வரலாறாக ஏ. சங்கரராவ் என்பவர் தலைக் கோட்டை (அதாவது இராட்சசித் தங்கிடி)ப் போர் முதல் சிவாஜியின் முடிசூட்டு விழா வரையுள்ள "இந்து" "இந்தியா" என்று ஒரு முழு ஏடு தீட்டியுள்ளார்.

என். கே. காத்ரே என்பவர் விரிவானதோர் மராத்திய இன வரலாறு எழுத முற்பட்டார். முதல் ஏடு மிகப் பெரிதாய்விட்டது. அத்துடன் அது முழுக்க முழுக்க விசயநகர வரலாறாகவே அமைந்து விட்டது. மராத்திய இன வரலாற்றின் முன்னுரையாக அதனை அவர் வெளியிட்டார்.

விசயநகர வீழ்ச்சிக் காலத்தில் அவ்வீழ்ச்சியில் பங்கு கொண்டும் அதை ஓரளவு பயன்படுத்தியும், அதன் பண்புகளையும் படிப்பினைகளையும் மேற்கொண்டும் பீசப்பூர்ப் படைத் தலைவனாக அமர்வுபெற்ற ஷாஜியும் அவன் புதல்வர்களான சிவாஜியும் ஏகோஜியும் எவ்வாறு அதன் அடிப்படையில், அதன் மரபு பேணி, அதன் ஆட்சிப் பகுதியையே தம் புதிய இனப் பேரரசின் பின் தளமாக்கிக் கொண்டு முன்னேறினர் என்பதை பல தென்னக, மராத்திய வரலாற்றாசிரியர் விளக்கிக்காட்ட முற்பட்டுள்ளனர்.

'இந்து' தேசீய அரையிருள் மயக்கத்திடையே முன்னைய பல வரலாற்றாசிரியர்கள் காணாது விட்ட பண்புகளைக் கூர்ந்துணர்ந்து விளக்க முற்பட்டவர்கள் கூட இல்லாமலில்லை. வடதிசைப் புயலில் அல்லோலகல்லோலப்பட்ட வடதிசை மக்களுள், அதை எதிர்த்து நின்று 'புறநானூற்று’ வீரங்காட்டிய முதல் இனத்தவர் இரசபுத்திரரே. ஆனால் இரசபுத்திரர் பாபரின் வீரத்தைத்தான் எதிர்த்துப் போராட முடிந்தது. ஒன்றுபட்டு நின்று அதனை அழிக்கவோ, அதைத் தடுத்து நிறுத்தவோ கூட முடியவில்லை. அக்பரின் அலைமாயையிலோ அவர்கள் வீரத்தில் குறைந்த ஏனைமக்களைவிட எளிதில் மசிந்து கரைந்தனர். இரசபுத்திரர் போல முறிவுறாமல், மாயையில் மசிந்துவிழாமல்