8
அப்பாத்துரையம் – 13
ஐந்து மொழியகங்களாகப் படிப்படியாகப் பிரிவுற்றது.ஆனால் அதே சமயம் பிளவுபடாத பண்டைத் தமிழகத்தின் பரந்தகன்ற தேசீயம் இப்போது பிளவுபட்ட தமிழகத்தில் பிளவு கடந்து பாய்ந்து பரவித் தோய்ந்து ஊறிப் புதிய செறிவுடன் புது வளர்ச்சியடையத் தொடங்கிற்று. பல்லவர் கால முதலே புதுக் குருத்து விட்டு அதுவே அலர்தாமரையின் அக இதழ் வட்டங்கள் தாண்டிய புற இதழ் வட்டமாய், தென்னகத் தேசீயமென்ற புத்துருவுடன் மிளிரலாயிற்று.
தென்னகத் தேசீயத்தின் முதல் முழு நிறை மலர்ச்சியே, விசயநகரப் பேரரசு. அம்முழு நிறைமலர்ச்சியின் அழகு வண்ணச் சின்னம் வெற்றித் திருநகர்.
பேரரசும் பெரு நகரமும்
தென்னகத்தின் ஒரு சிறிய பகுதியையோ, பெரும் பகுதியையோ ஆண்ட அரசுகள், பேரரசுகள் உண்டு. தென்னகம் கடந்து பரவிய பெரும் பேரரசுகளும் பல. ஆயின் இவற்றுள் விசய நகரத்துக்கு முற்பட்ட எதுவும் தென்னகத் தேசீயப் பேரரசு என்று கூறத்தக்கது அன்று. ஏனெனில் தேசீய எல்லை சென்றெட் டாதவை முழு நின்ற தேசீயம் அடையாதவை. தேசீய எல்லை கடந்து பரவுபவையோ என்றும் தேசீயம் பேண முடியாதவை. விசய நகரப் பேரரசு இவ்வகையில் பேரரசுகளிடையே தனிப்பட்ட சிறப்பு உடையது - அதுவே முதல் தென்னகத் தேசீயப் பேரரசு! அது தென்னக எல்லையையே தன் எல்லையாகக் கொண்டு நிலையான ஆட்சி நடத்திற்று. அத்துடன் தென்னக மொழிகள் யாவும் அளாவி நின்று, தென்னகத்தை மொழி மண்டலங்களாகப் பிரித்துத் தேசியக் கூட்டாட்சி நடத்திய பேரரசு அது ஒன்றே.
பேரரசின் இச் சிறப்புக்களில் ஒரு சிறிதும் குறையாத பண்புகளுடையது வெற்றித் திருநகர்! அதனை ஒத்த புகழும் வாழ்வும் உடைய தென்னகப் பெருநகர்கள் பலவற்றை வரலாறு கண்டதுண்டு. ஆனால் அரசியல் முறையிலும், புகழ் வாழ்விலும் தென்னகத்தே ஒரு தனித் தலைநகராய் இயங்கிய பேறு வேறு எந்தப் பெரு நகரும் காணாத ஒன்று. உலகின் திருவிடமாய், அப்புகழ்ப் பெயர் தாங்கிய தென்னகத்துக்குத் திருமருவிய ஒரு மையத் திருவிடமாய் அத்திருவுடைய நகரம் இயங்கியிருந்தது.
ய