பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

15

கோட்பாட்டினர் ஆகியவர் உரைகளின் ஒப்பீடுகள் அவற்றுக்குச் சான்று தருகின்றன.

மறக்கப்பட்டுவிட்ட மாபேரரசு (A Forgotten Empire) என்ற வரலாற்றோடு தீட்டிய அறிஞர் சீவெல் (Sewell) என்பவர் ஆவர். அவர் புத்தார்வக் காலத்தின் முதற்குரல் எழுப்பியுள்ளார். 'பெருநகரின் பெயர்கூட இப்போது மக்கள் மனத்திலிருந்து மறைந்து விட்டது. அது இருந்த இடத்தின் அழிபாடுகளைச் சுட்டி உரைப்பவர்கள் அந்நகரின் பெயர் கூறாமல் அருகிலுள்ள ஹம்பி என்ற சிற்றூரின் பெயராலேயே அதனை வழங்குகின்றனர். ஆயினும் அதனை ஆண்டவர்கள் மேலை உலகில் ஆஸ்திரியாவை விடப் பெரிதான ஒரு பேரரசின் அதிபர்கள் ஆவர். 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் அதனை வந்து கண்டு வியந்து பாராட்டிய ஐரோப்பிய யாத்திரிகர்கள் எத்தனையோ பேர் உண்டு. அதன் பெரும்பரப்பையும் பேரளவான வளத்தையும் குறித்து அவர்கள் வியப்பார்வத்துடன் எழுதிப் போயிருக்கின்றனர். செல்வச் செழிப்பிலும் வனப்பிலும் மேலையுலகின் எந்த நகரும் அதற்குச் சிறிதும் ஈடாக மாட்டாது என்று அவர்கள் அனைவரும் ஒருமுகமாகத் தயங்காமல் கூறியுள்ளனர்!'

கண்கூடான சான்றுகள்

நகரம் தென்வடலாக, 14 கல் நீளம், கீழ்மேலாக 10 கல் அகலம் உடையதாயிருந்தது. அதன் சுற்றளவு 60 கல். வடக்கிலும் மேற்கிலும் செங்குத்தான மலைகளாலும் தெற்கிலும் கிழக்கிலும் கொடும்பாறைகளடர்ந்த துங்கபத்திரைக் கரைகளாலும் அது சூழப்பட்டிருந்தது. இயற்கையரணாகவே அமைந்த இந்நகருக்கு ஒன்றன்பின் ஒன்றாக 7 கோட்டை மதில்கள் மேலும் அரண் காப்புத் தந்தன. நகருக்குள் செல்லும் பெருவாயில் ஒன்றே யானாலும், மதில் வாயில்கள் 64 அமைந்திருந்தன.

நகரில் எந்நேரமும் போருக்குப் புறப்படச் சித்தமாயிருந்த வீரர்கள் தொகையே 90,000. அரசன் துணைவியர் அதாவது அரண்மனை மாதர் மட்டும் 12,000 பேர் இருந்தனர் - கி.பி.1420- ஆம் ஆண்டில் நகரில் வந்து தங்கியிருந்த இத்தாலிய நாடு சூழ்வாணர் நிக்கோலோ டி காண்டி தரும் விவரங்கள் இவை.

-

-